ஹூஸ்டன் ஜன 13 : அறிவியல் ஆராய்ச்சிக்கான அமெரிக்காவின் மிக உயரிய விருதான எடித் (Edith Award), பீட்டர் ஓ டன்னல் விருது (Peter O Donnell Award) இந்த ஆண்டு அமெரிக்காவின் தென்மேற்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி பேராசிரியர் டாக்டர் இராம ரங்கநாதனுக்கு கிடைத்துள்ளது.
மனித உடலில் செயற்கையாக புரோட்டீன்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மையத்தின் இயக்குநராக டாக்டர் ராம ரங்கநாதன் பணியாற்றுகிறார். இவருடன் மேலும் இருவரும் சேர்ந்து இந்த விருதைப் பெறுகின்றனர்.
அறிவியல், மருத்துவம், பொறியியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை படைக்கும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் ஓ டன்னல் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது 25,000 அமெரிக்க டாலர்கள், பாராட்டுச் சான்றிதழ், சிறு உலோகச் சிலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
சிறந்த ஆராய்ச்சிப் பணிக்காக இந்த விருது பெறும் டாக்டர் இராம ரங்கநாதனை தென்மேற்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் டேனியல் கே.போடல்ஸ்கி பாராட்டினார். மனித செல்கூறு அறிவியலில் புதிய உத்திகளை வகுப்பதற்கு இராம ரங்கநாதனின் ஆராய்ச்சி பெரிதும் உதவும் என்றும் போடல்ஸ்கி தெரிவித்தார்.
இந்த விருதைப் பெறுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கிய தென்மேற்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத்துக்கு இராம ரங்கநாதன் நன்றி தெரிவித்தார். ஓ டன்னல் விருதானது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்றும் அவர் குறிப்பிட்டார். மனித உடலில் இயற்கையாக உள்ள புரோட்டீன்கள் செயல் இழக்கும்போது அவற்றுக்குப் பதிலாக செயற்கையான புரோட்டீன்களை செலுத்துவதற்கு ரங்கநாதனின் ஆராய்ச்சி வழிவகுத்துள்ளது.
No comments:
Post a Comment