Monday, January 19, 2009

அமெரிக்க அதிபராக ஒபாமா நாளை பதவியேற்பு : வாஷிங்டன் விழாக்கோலம்

உலகின் மிகப்பெரும் வல்லரசாக திகழும் அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டு சாதனை படைத்துள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரக் ஒபாமா நாளை பதவியேற்கிறார். இதனை அடுத்து வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாஷிங்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அமெரிக்காவின் 44-வது அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா தம்மை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனைவிட கூடுதலான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றுள்ளார். ஒபாமா பெற்ற இந்த வெற்றியின் மூலம் ஜார்ஜ் புஷ் தலைமையிலான குடியரசு கட்சியின் 8 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா நாளை பதவியேற்க உள்ளார். அதிபர் பொறுப்புகளை ஒபாமாவிடம் புஷ் ஒப்படைக்கிறார். ஒபாமாவுடன் அவரது அமைச்சரவை சகாக்களும் நாளை பதவியேற்க உள்ளனர்.

இந்த பதவியேற்பு விழாவுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒபாமாவின் பதவியேற்பு விழாவை காண ஏராளமான மக்கள் வாஷிங்டனில் குவிந்துள்ளனர்.இந்த பதவியேற்பு விழாவுக்கு 750 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.

பதவியேற்பு விழா துவக்கத்தை குறிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லிங்கன் நினைவிடத்தில் நேற்று இரவு இசைக் கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரக் ஒபாமா, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகள் மிகவும் சவாலானவை என்று கூறினார்.

அமெரிக்கா சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்ட ஒபாமா, இவற்றை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த சவால்களை சமாளிக்க ஒரு மாதம் ஆகலாம். அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். இதில் சில பின்னடைவுகள் கூட ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடி உள்பட அமெரிக்கா சந்தித்து வரும் சவால்களை சந்திப்பது எளிதான பணியல்ல என்றும், இதற்கு அமெரிக்கர்கள் தயாராக வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments: