Monday, January 12, 2009

ஜார்கண்ட் மாநிலத்தில் மீண்டும் தேர்தல்?: சிபு சோரன் எச்சரிக்கை

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி சிபுசோரன் நேற்று ராஜினாமா செய்தார். தனது கட்சியை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்காவிட்டால் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில், துணை முதல்-மந்திரி பாபுலால் மராண்டியும் ராஜினாமா செய்தார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான சிபுசோரன், ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியாக கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். பதவியேற்று ஆறு மாதத்துக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதால் தாமர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று நெருக்கடி எழுந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் அவர் பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை.

இந்த சூழ்நிலையில், சிபுசோரனுக்கு எதிராக செயல்பட்டு வருபவரும், அவருடைய தோல்விக்கு காரணமானவருமான துணை முதல்-மந்திரி பாபுலால் மராண்டி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "இடைத் தேர்தலில் தோல்வி அடைந்த உடனேயே முதல்-மந்திரி பதவியை சிபுசோரன் ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை. எனவே, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்'' என்றார்.

மராண்டி ராஜினாமா செய்த சிறிது நேரத்துக்குள் கவர்னர் மாளிகைக்கு சிபுசோரன் வந்தார். கவர்னரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இதற்கிடையே, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டசபை கட்சி தலைவராக 53 வயதான சம்பி சோரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதல்-மந்திரி பதவி அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கு சிபுசோரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து சிபுசோரன் கூறும்போது, "ஜனநாயக நடைமுறையின் கீழ், எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன். சம்பி சோரனை முதல்-மந்திரி வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். இதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன். மாநிலத்தில் உள்ள கூட்டணி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் யாரும் வரவில்லை. சம்பி சோரனை முதல்-மந்திரி ஆக்காவிட்டால் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்'' என்றார்.

No comments: