இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் நேற்று இலங்கை சென்றார். அவர் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசுகிறார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது.இலங்கை போர் விமானங்கள் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சரமாரி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றன. தரை மார்க்கமாகவும் தமிழர் பகுதிகளுக்குள் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதல்களில் அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தலைமையிடமாக விளங்கிய கிளிநொச்சியை கைப்பற்றி விட்டதாக சமீபத்தில் அறிவித்த சிங்கள ராணுவம், தற்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு பகுதியை முற்றுகையிட்டு உள்ளது. ராணுவத்தினர் முல்லைத்தீவு பகுதிக்குள் நுழைந்து விடாமல் தடுக்க விடுதலைப்புலிகள் தீவிரமாக போரிட்டு வருகிறார்கள்.
சிங்கள ராணுவத்தினர் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசுவதால் உயிர் தப்புவதற்காக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக அடர்ந்த காட்டுக்குள் புலம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க, உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழக தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
ஆனால் அவரது இலங்கை பயணம் குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.இந்த நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் இலங்கை செல்வார் என்று கடந்த செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது.அதன்படி, சிவசங்கர் மேனன் நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பு புறப்பட்டு சென்றார்.
அங்கு அவர் அதிபர் ராஜபக்சேயை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து, இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். கொழும்பு நகரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் `சார்க்' மாநாடு குறித்தும் பேச இருக்கிறார்.
இலங்கை வெளியுறவு மந்திரி மற்றும் உயர் அதிகாரிகளையும் சிவசங்கர் மேனன் சந்தித்து பேசுவார்.
இந்நிலையில், வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் இன்று இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசுவதோடு, அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசை இந்தியா சார்பில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பயணம் மேற்கொள்ளும் சிவசங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்றி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "இந்திய வெளியுறவுச் செயலர் போர் நிறுத்தத்தை வலியுறுத்த மாட்டார் என்றே கருதுகிறேன்" என்று இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்துவதற்காக டெல்லி வந்துள்ள அவர் செய்தியாளகளிடம் மேலும் கூறுகையில், 'இலங்கையில் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய மாநாடு குறித்து பேசுவதற்கே மேனன் செல்கிறார்', என்று கூறியுள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவியும், தெற்கு ஆசிய மாநாடு குறித்து இலங்கை அதிகாரிகளிடம் சிவசங்கர் மேனன் பேச்சு நடத்தவே இலங்கை செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்தியா சார்பில் சிவசங்கர் மேனன் வலியுறுத்துவது சந்தேகமே எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment