விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ்ப்பாண தீபகற்பம் முழுவதையும் இலங்கை ராணுவம் விடுவித்திருப்பதாகவும், பிரபாகரனை பிடிக்க முல்லைத்தீவு சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அண்மையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியையும், அதன் அருகில் உள்ள பகுதிகளையும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. வடக்குப் பகுதியில் யானையிறவை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அதன் அருகில் உள்ள சுண்டிக்குளம் பகுதியையும் ராணுவம் மீட்டிருக்கிறது.
இந்த சுண்டிக்குளம் யாழ்ப்பாணத்தையும், இலங்கையின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் யாழ்ப்பாண தீபகற்பம் முழுவதையும் இலங்கை ராணுவம் புலிகளிடமிருந்து மீட்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சுண்டிக்குளம் பகுதியை இலங்கை ராணுவம் மீட்ட போது 850 தமிழர்களும் மீட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் என்றும், தற்போது அவர்களிடமிருந்து தப்பி வந்திருப்பதாகவும் ராணுவம் கூறுகிறது.
இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இலங்கை அரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சியை கைவிட்டு முல்லைத்தீவு பகுதிக்கு தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ராணுவம் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. பெரும் உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு முல்லைத் தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புலிகள் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தை முழுவதும் மீட்டு விட்ட ராணுவம் முல்லைத்தீவை சுற்றி வளைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது என்றும், சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர் என்றும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய் நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
கொரில்லா போர் முறையில் சிறந்து விளங்கும் புலிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், விமானப்படை, ராணுவம், கடற்படை ஆகிய மூன்றையும் முடுக்கி விட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் கடல் வழியாக பிரபாகரன் தப்பிச் செல்ல கூடும் என்பதால், கடற்பகுதி முழுவதும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், கடற்படை கப்பல்கள் மற்றும் படகுகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
சுண்டிக்குளத்தை பிடிக்க நடந்த தாக்குதலின் போது கடற்புலி பிரிவை சேர்ந்த மூத்த தளபதி திரு என்பவர் கொல்லப்பட்டதாக உதய் நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு சொந்தமான 100 படகுகள், 400 கண்ணிவெடிகள், பீரங்கிகளை அழிக்கும் 40 கண்ணி வெடிகள் ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.பிராபகரன் இருப்பிடத்தை நெருங்கிவிட்டோம் என்றும் புலிகள் தரப்பில் கடும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் கூறியுள்ள அவர், ராணுவ தரப்பில் எந்த சேதமும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment