ஆங்காங்கே கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இவர்கள் அண்ணா அறிவாலயம் வந்ததும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றார்கள். அண்ணா அறிவாலயத்தில் இருந்த முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் லதா அதியமான் ஆசிபெற்றார். இந்த விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-
தி.மு.க 1957-ம் ஆண்டிலேயிருந்து அறிஞர் அண்ணாவால் ஆணையிடப்பட்டு, தேர்தல்களிலே ஈடுபட்டு பெருவாரியான வாக்குகளை பெற்றும், பெறாமலும், முறையே வெற்றியை, தோல்வியை சந்தித்திருக்கிறது.
ஆனால், இதுவரையில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வரலாற்றை இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம் என்றால் அது தம்பி அழகிரியின் கை வண்ணம், செயல் வண்ணம், அவருக்கு துணையாக பணியாற்றிய தம்பி ஸ்டாலினுடைய செயல் திறன், அங்கே மாவட்டக்கழக செயலாளர்களாக இருக்கின்ற தளபதி, மூர்த்தி ஆகியோருடைய உழைப்பு, இந்த பலனை அளித்துள்ளதை நாம் காண்கிறோம்-வெற்றியின் அறுவடையாக.
முதலில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், மற்ற கட்சிக்காரர்கள் குறிப்பாக அ.தி.மு.க.வினர், அதோடு இப்போது புதிதாக கூட்டு சேர்ந்திருக்கின்ற எனதருமை கம்யூனிஸ்டு கட்சிகளின் தோழர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து இந்த தேர்தலிலே அழகிரி இந்த வட்டாரத்திலேயே இருக்கக்கூடாது என்று சிந்தித்து, அதை செயற்படுத்த தேர்தல் ஆணையத்து அதிகாரிகள் வரையிலே சென்றார்கள்.
இப்போதுதான் எனக்கு புரிகிறது. அழகிரிக்கு அப்போது கண்ணிலே ஒரு சிறு புண் ஏற்பட்டு, நானும் அவனுடைய தாயாரும் மிகவும் வலியுறுத்தி, மதுரையிலே கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அழகிரியும் சம்மதித்திருந்தார். அப்போது நான் இந்தப் பணியை, தேர்தல் பணிக்குழு தலைவர் என்ற பணியை தந்த போது, நினைவுபடுத்தினார்-என்னை தேர்தல் பணிக்குழு தலைவராக நியமிக்கிறீர்களே, நீங்கள் தானே கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளச் சொல்லியிருந்தீர்கள், எனவே நான் அந்த சிகிச்சைக்கு செல்ல வேண்டும், ஆகவே எனக்கு ஓய்வு கொடுங்கள் என்று பத்திரிகை மூலமே கேட்டார்.
இப்போது தான் எனக்கு புரிகிறது. மாற்றுக் கட்சிக்காரர்கள், எதிர்க்கட்சிக்காரர்கள்-அழகிரி அங்கே இருக்க தேவையில்லை என்று சொல்வதற்குக் காரணம்-நாங்களாகவே தோற்பதற்குத் தயாராக இருக்கிறோம், யாரும் இங்கே வந்து எங்களை தோற்கடிக்க வேலை செய்ய வேண்டாம் என்று அவர்கள் எண்ணியது தான் போலும் என்று எனக்கு இப்போது தான் புரிகிறது.
திருமங்கலம் இடைத்தேர்தலின் வரலாறு என்ன? நான் நம்முடைய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அறிக்கை ஒன்றைப் பார்த்தேன். அவர் சொல்லியிருக்கிறார். இடைத்தேர்தல் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ இறந்துவிட்டால், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரோ, அந்தக் கட்சியிலே இருந்து ஒருவரை அவருக்குப் பதிலாக, அந்த இடத்தில் நியமித்துவிட்டால் அந்தக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கியதாக ஆகி விடும், தேர்தல் நடந்து வீண் தகராறுகள் இல்லாமலே முடிந்து விடும் என்று அவர் சொல்லியிருக்கிறார். நல்ல கருத்துத் தான்.
நல்ல கருத்துக்களை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வாரா? அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஏற்றுக் கொள்ளாதது மாத்திரமல்ல, அந்தக் கட்சியிலே உள்ளவரை மாற்றாக நிற்க வைப்பதற்கு பதிலாக, என் கட்சியிலே உள்ளவரை வேட்பாளராக நிறுத்துகிறேன் என்றார்.
லட்சியப் பிடிப்புள்ளவர், மொழிப் போராட்ட வீரர், இளவரசன் என்பார் - ஈழப்பிரச்சினையிலே கூட தீவிரமான நண்பர் - அவர் இறந்த இடத்தில் அ.தி.மு.க. சார்பாக ஒருவரை நிறுத்தி வைத்து அவருக்கு வாக்களிக்க வேண்டுமென்று சொன்னதற்கு என்ன காரணம்?
அகில இந்திய அளவிலே உருவாகி வருகின்ற மூன்றாவது அணியின் தலைவர்களை எல்லாம் கவர, அவர்கள் இந்த அணியிலே சேர, சி.பி.எம்., சி.பி.ஐ., ஆகிய கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு தமிழகத்திலும், வேறு பல மாநிலங்களிலும் உள்ள கட்சிகளை எல்லாம் தோற்கடித்து, தான் பிரதமராக வந்துவிட வேண்டும் என்ற எண்ணம், பீங்கான் கோப்பைகள் உடைந்து சிதறியதைப் போல - பிரதமர் பதவி, ஜெயலலிதாவைப் பொறுத்தவரையிலே இப்போது உடைந்து சிதறிவிட்டது என்பதற்கு இந்த இடைத்தேர்தலில் விளைந்திருக்கின்ற முடிவுதான் அடையாளம்.
எதற்கு மூன்றாவது அணி? இந்த மூன்றாவது அணியிலே யார் யார் இருக்கப் போகிறார்கள்? கம்யூனிஸ்டுகள் இருப்பார்கள், ஜெயலலிதா இருப்பார். ஏனென்றால் இவர்களுக்கெல்லாம் ஒரே கொள்கை. வித்தியாசமே கிடையாது. எல்லோருக்கும் ஒரே கொள்கை. சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று சி.பி.எம். சொன்னால், ஆமாம் வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வாரா? சொல்ல மாட்டார்.
அது ராமர் பாலத்தை இடிக்கின்ற வேலை. சேது சமுத்திரத் திட்டத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லக் கூடிய ஜெயலலிதாவும்-மதவாதத்திற்கு வக்காலத்து வாங்குகின்ற ஜெயலலிதாவும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் - மத வாதத்திற்கு எதிரான ஒரு அணியை அமைப்பதாக சொன்னால், அதை யாராவது நம்புவார்களா?
மக்கள் நம்புவார்கள் என்று மனப்பால் குடித்து, இவர்கள் இந்த அணியை அமைத்தார்கள். ஆனால், அணி முழுமை பெறவில்லை.
நாம் இந்தத் தேர்தலிலே மாற்றுக் கட்சிகளை மாத்திரமா சமாளிக்க வேண்டியிருந்தது. தேர்தல் நடத்துகின்ற தேர்தல் ஆணையம் நம்மை எந்த அளவிற்கு படாதபாடு படுத்தியிருக்கிறது. எண்ணிப் பார்க்க வேண்டாமா? அதையும் கடந்து நாம் இந்தத் தேர்தலிலே வெற்றி பெற்றிருக்கிறோம். நான் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, மறுப்பு தெரிவிக்கவில்லை. அந்த ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் ஆணையம் மாத்திரம் இந்த அளவிற்கு கெடுபிடி செய்யாமல் இருந்தால், இந்த அளவிற்கு நம்மை மிரட்டாமல் இருந்தால் நமக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தால், அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லாமல் நமக்கு மாத்திரம் சொன்னார்களே, அதைப்பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், நாம் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்க முடியாது. அவர்களுடைய மிரட்டலால், அதிகாரத்தால், கெடுபிடியால்தான் ஒரு நான்காயிரம், ஐந்தாயிரம் வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற வேண்டிய இந்த இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், நம்முடைய நன்றியும் வணக்கமும் தேர்தல் ஆணையத்திற்கு சொல்ல வேண்டும்.
தம்பி அழகிரியைப் பற்றி நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியரும், மற்ற நண்பர்களும் தம்பி ஸ்டாலினும் இங்கே எடுத்துச் சொன்னார்கள். நாளைக்கு பத்திரிகையிலே போடுவார்கள் - என்ன? அவரைக் கூப்பிட்டு வரவேற்பெல்லாம் நடத்திவிட்டீர்கள், என்ன பொறுப்பு கொடுக்கப் போகிறீர்கள்? என்றெல்லாம் கேட்பார்கள். பொறுப்பாக இருப்பவருக்கு பொறுப்பு ஏன்? என்பது தான் கேள்வி. இப்போது பொறுப்பு இல்லாவிட்டால் தானே பொறுப்பு தர வேண்டும். இருந்தாலுங்கூட அப்பா எப்படி கிண்டல் அடித்து கழற்றி விடுகிறார் பார்த்தாயா என்று அழகிரி சொல்லக்கூடும், சொல்லக் கூடிய ஆள்தான்.
காத்திரு தம்பீ அழகிரி! கட்டளை வரும். நானும் பேராசிரியரும் கலந்து பேசி, அந்த கட்டளை பிறப்பிக்கப்படும். அது நீ கழகத்தைக் காப்பாற்றுகின்ற கட்டளையாக அமையும். உன்னுடைய பலம் என்ன? வலிவு என்ன? என்பதையும் அறிவேன். உன்னுடைய குணம் என்ன என்பதையும் அறிவேன். ஆகவே உன்னுடைய குணம் பார்த்து, வலிவு பார்த்து, நலம் பார்த்து, பலம் பார்த்து, நிச்சயமாக தர வேண்டிய நேரத்தில் நானும், பேராசிரியரும் கலந்து பேசி தீர்மானிப்போம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
No comments:
Post a Comment