ஜன 23 : ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் மோசமான சூழ்நிலைகள் உலக நாடுகளுக்கே தீவிரவாத அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான அமெரிக்க விசேசப் பிரதிநிதியாக ரிச்சர்ட் ஹோல்ப்ரூக்கை நியமனம் செய்து, பின்னர் உரை நிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது :
அமெரிக்காவின், பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னனிப் போரில் முக்கியப் புள்ளியில் இருப்பது பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்தான் என்று திட்டவட்டமாகக் கூறினார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகளில் அல் கொய்தா போன்ற பயங்கர வாத அமைப்புக்கள் உலக நாடுகளை தாக்குவதற்கும், அச்சுறுத்துவதற்கும் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா மீதான 9/11 தாக்குதல் போன்ற இன்னொரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த தக்க தருணம் பார்த்துக்கொண்டுள்ளன. அதனால் அமெரிக்கா இன்னும் பெரிய இழப்புகளைச் சந்திக்கும் அபாய கட்டத்தில்தான் உள்ளது.
ஆனால் தமது நிர்வாகமானது அதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற இலக்கில் மிகத்தெளிவாகவே உள்ளது. மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன, அவை எந்த அளவுக்கு வலுவாக உள்ளன என்பதை தாம் சீரிய நோக்கோடு கவனிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இவை உடனே தீர்க்க முடிந்த பிரச்சினைகள் இல்லையாயினும், அமெரிக்கா மிகுந்த கவனத்தோடு கையாளத் திட்டமிட்டுள்ளது.
தனது ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் கொள்கைகள் தொடர்பில் ஒபாமா விபரிக்கையில், "நாங்கள் அப்பிராந்திய அரசாங்கங்களுடனான பலமான சகோதரத்துவத்தையும், நேட்டோ நட்புறவு நாடுகளுடனான நிறைவான ஒத்துழைப்பையும் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் மக்களுடன் ஆழமான தொடர்புகளையும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை தடை செய்வதில் பரந்த தந்திரோபாயமொன்றையும் எதிர்பார்த்துள்ளோம்'' என்று கூறினார்.
No comments:
Post a Comment