இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் சிங்கள இனவெறி பிடித்த அரசு கொடூரத்தின் உச்சக் கட்டமாக ஈவு இரக்கமின்றி மிருகத் தனமாக வான்வழி குண்டு வீசியும், ராணுவத் தாக்குதல் நடத்தியும், துப்பாக்கியால் சுட்டும் உணவு, மருந்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பட்டினிச் சாவு நடத்தியும், பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் தமிழ் இனத்தை அழித்து வருகிறது.
பள்ளிகள், ஆதரவற்றோர் விடுதிகள், வீடுகள், மருத்துவமனைகள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்றும் பாராமல் அனைத்தையும் தகர்த்து ஒட்டுமொத்த தமிழினத்தையே அடியோடு அழித்து ஒழித்து வரும் ராஜபக்சே அரசின் கொடூரமான சர்வாதிகார நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தும், உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் இலங்கையில் இந்தியா உடனடியாக தலையிட்டு போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-அமைதிப் பேச்சைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வரும் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஊர்வலமாகச் சென்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
அந்தந்த பகுதியில் உள்ள கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியின் செயல் வீரர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆங்காங்கே குறிப்பிட்ட இடத்தில் இருந்து முழக்கமிட்டவாறு ஊர்வலமாகச் சென்று தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment