தாம்பரத்தை அடுத்த மறைமலை நகரில் நடைபெற்ற இந்த உண்ணா விரத போராட்ட தொடக்க நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் மன்சூர் அலிகான், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் விடுதலைச் செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இலங்கையில் நித்தம் நித்தம் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டு வருகிறார்கள். உலக அளவில் தடை செய்யப்பட்ட பார்சல் குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
ஆனால் இதுவரை இலங்கையில் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை. தமிழக முதலமைச்சர் கருணாநிதியை பொறுத்தவரை தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டார்.
அண்மையில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போரை நிறுத்துமாறு வலியுறுத்தினார். ஆனால் அப்போது பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மத்திய அரசு இதுவரை இலங்கைக்கு அனுப்பவில்லை.
அதனால் தான் இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு தலையிடக்கோரியும், அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி தமிழர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துச்சொல்லும் விதமாகத்தான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன்.
எனவே மத்திய அரசு இனியும் ஆறரை கோடி தமிழக தமிழர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தக் கூடாது. வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் போரை நிறுத்துவதற்காக இலங்கை செல்வதாக தெரியவில்லை. வேறு விஷயமாகத்தான் அவர் செல்கிறார். இதனை இலங்கை அமைச்சரும் உறுதிப்படுத்தி இருக்கிறார். அத்துடன் போரை தீவிரப்படுத் துவோம் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.
அண்மையில் முதலமைச்சரை நானும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு ஒன்றை அளித்துவிட்டு வந்தோம். அவரும் பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் பேசி மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
இனியும் மத்திய அரசு இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கக் கூடாது. இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கோரிக்கையை வலியுறுத்தித்தான் தற்போது என்னுடைய காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன் என்றார் திருமாவளவன்.
No comments:
Post a Comment