ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் முதல்-மந்திரியாக இருந்தார்.
சிபுசோரன் சமீபத்தில் தான் இங்கு முதல்-மந்திரி பதவிக்கு வந்தார். அப்போது அவர் எம்.எல்.ஏ.வாக இல்லை. முதல்-மந்திரியாக பதவி ஏற்பவர் 6 மாதத்தில் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்று சட்ட விதி உள்ளது.
எனவே அவர் அங்கு தாமர் சட்டசபை தொகுதி யில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். எனவே முதல்-மந்திரி பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அதற்கு பதிலாக புதிய முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதில் கூட்டணி கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் ஜார்கண்ட் அரசியலில் குழப்பம் நிலவியது. அங்கு ஏற்பட்ட நிலைமையை கவர்னர் சையது சிப்தே ரசி ஆய்வு செய்தார். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்ததால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்.
இதுபற்றி முடிவு எடுக்க இன்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. கவர்னர் சிபாரிசை ஏற்று அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தனர். சட்டசபையை முடக்கி வைக்கவும் முடிவு செய்தனர்.
இந்த முடிவு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார்.
No comments:
Post a Comment