இலங்கையில் செத்து மடிந்து கொண்டிருக்கும் எம் தமிழீழ மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி அந்தப் படுகொலைகளை நிறுத்தவேண்டும் நிறுத்தவேண்டும் என்று பல முறை மத்திய அரசை மன்றாடிக் கேட்டுப்பார்த்துவிட்டோம். ஆனால் இதுவரை ஒரு பயனும் இல்லை. இனியும் பொறுப்பதற்கில்லை. இதுவே கடைசித் தீர்மானம் என்று சட்டசபையில் நேற்று நிறைவேற்றிய சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசும்போது கலைஞர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்து, இந்த நாடகத்தை நம்ப நாங்கள் தயாராக இல்லை என அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்புச் செய்தனர்.
மேலும் கலைஞர் கூறுகையில், 1939 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தனது "இந்தியன் இன் சௌத் ஏசியா" நூலில் கூறியதை நினைவுகூர்ந்தார். வெளிநாடுகளில் வாழக்கூடிய இந்தியர்களுக்கு இன்று இந்தியா பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை, ஆனால் அவர்களுக்கு ஏற்படும் அநீதிகளையும், இன்னல்களையும் தட்டிக்கேட்கும் காலம் விரைவில் வரும், அன்று இந்தியாவின் வலிமையால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு நியாயம் கிடைக்கும்" என்று கூறியதை நினைவிற்கொண்டு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று கூறினார்.
ஐ.நா. கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இலங்கை இன்று தமிழர்களின் சுடுகாடாக மாறிக்கொண்டுள்ளது. நாம் தமிழகத்தில் வாழ்கிறோம், நமக்கு ஏற்படும் துன்பங்களை, துயரங்களை மத்திய அரசு தட்டிக்கேட்கும் என்று நல்லெண்ணத்திலும் நம்பிக்கையிலுமே நாம் மத்திய அரசை கண்ணீர் மல்க மன்றாடிக் கேட்கிறோம். ஆனால் அதற்குப் பயனில்லை என்றால் இனி அடுத்தகட்ட நடடிவக்கைக்கு நாங்கள் தயார். இங்கு சில எதிர்க்கட்சி நண்பர்கள் "இந்த ஆட்சி தேவையா?" என்று குரல் எழுப்புகின்றனர். ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவிற்காவது குரல் கொடுக்க முடிகிறது. ஆட்சியை இழந்தால், இலங்கையில் அமைதி ஏற்படும் என்ற உத்திரவாதம் இருந்தால் அதற்கும் நாங்கள் தயார் என்று கலைஞர் பேசினார்.
No comments:
Post a Comment