திருமங்கலம் இடைத்தேர்தலில் வாய்த்துடுக்குத்தனமாக பேசியதால் சில வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் குறைந்துவிட்டன என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கேள்வி:- தி.மு.க.வின் பணபலம், குண்டர் படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்:- இப்படி வாய்த்துடுக்குத்தனமாக பேசியே திருமங்கலம் தேர்தலில் சில வேட்பாளர்கள் வேண்டுமென்றே தங்கள் வாக்குகளை குறைத்துக்கொண்டார்கள். அந்த எதிர்க்கட்சிகளுக்கு இவரே வழிகாட்டியாக ஆகிவிட்டார்.
கேள்வி:- 7-ந்தேதியன்று 5 மணிக்கு பிறகும், தி.மு.க. அமைச்சர்களும், அழகிரியின் குண்டர்களும் தொகுதிக்கு உள்ளே வலம் வந்ததாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அழகிரியின் பின்னால் தொண்டர்கள்தான் வருவார்கள். யார் பின்னால் குண்டர்கள் வந்தார்கள் என்பது மதுரை மக்களுக்கு தெரியும்.
கேள்வி:- இந்தியத்தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, கட்டுப்பாடு என்பதெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான் போலும் என்று ஜெயலலிதா மத்திய தேர்தல் ஆணையத்தையும் சாடியிருக்கிறாரே?
பதில்:- இந்தியத்தேர்தல் ஆணையத்திற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று சொல்லத் தோன்றினாலும் சொல்ல மனம் வரவில்லை. தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மத்திய தலைமை தேர்தல் ஆணையர், பீகார் அளவிற்கு தமிழகம் கெட்டுவிட்டது என்றும், வன்முறையில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்படி சொன்னவரைப் பற்றித்தான் ஜெயலலிதா தனது அறிக்கையில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
3 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று ஜெயலலிதா கூறியவுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தபோது, அவர் நேர்மையான அதிகாரி என்பதில் இருவேறு கருத்துக்கு இடம் இல்லை என்று சொன்னவர் இதே ஜெயலலிதாதான்.
அதே தேர்தல் அதிகாரி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது என்றும், எந்தவிதமான வன்முறையோ, பண விநியோகமோ நடைபெறவில்லை என்று தெரிவித்த பிறகும், ஜெயலலிதா தன் அறிக்கையில், தி.மு.க. அமைச்சர்கள் பணம், தங்க நாணயம் வாக்காளர்களுக்கு கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்கான ஆதாரம் எதையாவது அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரா என்றால் கிடையாது.
கேள்வி:- காவல்துறை, கருணாநிதியின் ஏவல் துறையாகத்தான் இருக்கிறது என்ற ஜெயலலிதாவின் கூற்று பற்றி?
பதில்:- 3 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார் ஜெயலலிதா. தேர்தல் ஆணையம் அந்த 3 அதிகாரிகளையும் 24 மணி நேரத்திற்குள் மாற்றிவிட்டு, தேர்தல் ஆணையம் கூறிய அதிகாரிகளை அந்தத் தொகுதியில் நியமனம் செய்தது. அதற்கு பிறகும் அந்த 3 அதிகாரிகளையும் பணியிலிருந்து நீக்குவதுதான் முதல் வேலை என்றார்.
இப்போது ஒட்டுமொத்தமாக அந்த துறையையே ஜெயலலிதா ஏவல் துறை என்று கூறியிருப்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காவல்துறையினரும் இதைப்புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி:- ஜெயலலிதா தனது அறிக்கையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் எந்தவிதப் பயனும் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:- தேர்தல் ஆணையம் இன்னும் எப்படியெல்லாம் பயன்பட வேண்டுமென்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை.
கேள்வி:- இனிமேல் தேர்தலை நடத்துவதை விட தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து விடலாம் என்று ஜெயா சொல்லியிருப்பது பற்றி?
பதில்:- ம.தி.மு.க. நின்று வெற்றி பெற்ற இடத்தை, "பெரிய அண்ணன்'' தோரணையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரை மட்டும் அழைத்து பேசி அந்த இடத்தை பிடுங்கிக் கொண்டு, அ.தி.மு.க. வேட்பாளரை அந்த அளவிற்கு பேராசையோடு போட்டியிட வைத்தார். தி.மு.க. அணியிலே இருந்த தோழமைக் கட்சிகளையெல்லாம் எவ்வளவு அவசர அவசரமாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்? எதைச்செய்த போதிலும், மக்கள்தான் எஜமானர்கள். இப்போதெல்லாம் அவர்களுக்கு உண்மை எது, போலி எது என்பது நன்றாகவே தெரிகிறது.
கேள்வி:- தி.மு.க. பெற்ற வெற்றி வெறும் மாயைதான் என்று தே.மு.தி.க. தலைவர் அறிக்கை விடுத்திருக்கிறாரே?
பதில்:- இவரென்ன? திருமங்கலம் தேர்தலில் இவரது கட்சியையும் சேர்த்து 24 பேர் வெற்றி பெறாதவர்கள் மட்டுமல்ல, தாங்கள் கட்டிய "டெபாசிட்'' தொகையையும் இழந்து விட்டார்களே, அவர்களுக்கு இந்தத் தேர்தல் மாத்திரம் மாயை அல்ல, உலகமே மாயையாகத்தான் தோன்றும்.
கேள்வி:- பிரசாரம் தொடங்கிய நாளிலிருந்து வாக்குப்பதிவு முடியும் நேரம் வரை ஆளுங்கட்சி விதிமுறைகளை மீறியது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராசன் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து அறிக்கை கொடுத்துள்ளாரே?
பதில்:- அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி வரிசையிலே இருந்த மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், அப்போது கொடுத்த அறிக்கையை அப்படியே ஞாபகத்திலே வைத்திருந்து இப்போதும் சொல்லியிருக்கிறார். திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு மாதம் முன்புவரை தமிழகத்தில் தி.மு.க.வின் தோழமைக் கட்சியாக இருந்து, வாரத்திற் ஒருமுறை சந்தித்து, உரையாடி கொண்டிருந்துவிட்டு, தற்போது திடீரென்று அணியை மாற்றிக் கொண்டு, அ.தி.மு.க. விற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி வாக்கு கேட்க முன்வந்ததை, அந்தக் கட்சியைச் சேர்ந்த அடித்தள தொண்டர்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.
இதே மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது, இதே வரதராசன் அங்கே வந்து பேசினாரே, அப்போது பண பலம், அதிகார பலம், அடியாள் பலம் எல்லாம் இல்லை, இப்போது திடீரென்று வந்துவிட்டதா? எவ்வளவு பெரிய கட்சி? எந்த அளவிற்கு தவறாக அறிக்கைவிட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது?
கேள்வி:- திருமங்கலம் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, தி.மு.க.வையும், அதன் தலைவராகிய உங்களையும் 18 ஆண்டுக்காலம் தொடர்ந்து பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ஒருவர் வாய்க் கூசாமல், கேட்போர் செவிகளை மூடிக்கொள்ளும் அளவிற்கு திட்டித் தீர்த்தாரே, அதைப் பற்றியெல்லாம் நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?
பதில்:- "நிறை குடம் தளும்பாது; குறை குடம் கூத்தாடும்'' என்ற பழமொழியை கேட்டதில்லையா?
No comments:
Post a Comment