இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டது. சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அளித்துள்ள அதி நவீன ஆயுதங்களை கொண்டு இலங்கை ராணுவம் போரிட்டு வருகிறது. இதனால் முல்லைத் தீவு மாவட்டம் மட்டுமே விடுதலைப்புலிகள் வசம் தற்போது உள்ளது.
அது மிகுந்த அடர்த்தியான காட்டுப்பகுதி என்பதால் ராணுவம் தொடர்ந்து முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பெரிய அளவிலான தாக்குதல் நடத்த முடிவு செய்து இருக்கிறது. இது குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில வார பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முல்லைத் தீவில் உள்ள விடுதலைப்புலிகளை 500 சதுர கி.மீ. பரப்பளவில் இலங்கை ராணுவம் நெருக்கி விட்டது. ஒரு பெட்டி போன்ற வடிவமைப்பில் ராணுவம் சுற்றி வளைத்து நிற்கிறது. இதையடுத்து இறுதிகட்ட நடவடிக்கையை ராணுவம் தொடங்கி உள்ளது. அதற்கு ஏற்றவாறு தனது படைகளை நகர்த்தி வருகிறது.
அங்குள்ள விடுதலைப்புலிகள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்காக 8 டிவிசன்களை கொண்ட 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். 500 சதுர கி.மீ. பரப்பளவையும் அவர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
அதி நவீன ஆயுதங்களையும் அதிக அளவில் ராணுவம் குவித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த பணி மும்முரமாக நடைபெறுகிறது. இலங்கை வரலாற்றிலேயே, மிக குறைந்த பரப்பளவில் அதிக அளவில் ராணுவத்தினரை நிறுத்துவது இதுவே முதல் முறையாகும்.
பெரிய தாக்குதலுக்கு தயாராகி வரும் அதே நேரத்தில், சிறிய தாக்குதல்களையும் ராணுவம் நடத்தி வருகிறது. இதற்காக சிறப்பு படைகள் அமர்த்தப்பட்டு உள்ளனர். தினந்தோறும் 10 முதல் 15 விடுதலைப்புலிகளையாவது கொல்ல வேண்டும் என்பதே அந்த படைகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு.
இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், முல்லைத் தீவில் உள்ள புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதிக்கு தென் பகுதியில் பிரிகேடியர் நந்தன உதவட்டா தலைமையில் ராணுவத்தினர் தீவிரமாக போரிட்டனர். அப்போது, மருதம்புவேல் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகளின் கொரில்லா பயிற்சி முகாம் கைப்பற்றப்பட்டது. அதில் 6 பதுங்கு குழிகள், இரண்டு கட்டிடங்கள் மற்றும் 6 தற்காலிக கூடாரங்கள் ஆகியவை இருந்தன.
இது தவிர, விடுதலைப்புலிகளின் படகு தொழிற்சாலை ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இரண்டு அதி விரைவு படகுகள், 7 சிறிய படகுகள் உள்ளிட்டவை அங்கு கிடந்தன. சிறிய படகுகளில் தற்கொலை படை தாக்குதலுக்கு தேவையான அனைத்து கருவிகளும் இருந்தன. தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவம் முகாமிட்டுள்ளது.
இதுபோல முல்லைத்தீவின் வடக்கு பகுதியில் முத்தியங்காடு என்ற அடர்ந்த காட்டுப்பகுதி வரை ராணுவம் முன்னேறி இருப்பதாகவும் அந்த இடத்தை விடுதலைப்புலிகள் காலி செய்து ஓடி விட்டதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேறு சில இடங்களில் விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் 31 உடல்களை ராணுவம் கைப்பற்றியது. அதில் பெண்களும் உண்டு. டி௫6 ரக துப்பாக்கிகள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள், ஆர்.பி.ஜி. லாஞ்சர்கள், கண்ணிவெடிகள், ரேடியோ கருவிகள் போன்ற ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவல்களை, தேசிய பாதுகாப்பு தகவல் மையம் தெரிவித்தது.
No comments:
Post a Comment