Monday, January 12, 2009

போர் தொடர்ந்தால் தமிழினம் அழிந்துவிடும் : இலங்கை எம்.பி.க்கள் வருத்தம்

இலங்கையில் போர் தொடர்ந்தால் தமிழினம் அழிந்துவிடும் என்றும் தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று இலங்கை தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்திய அரசின் மேற்பார்வையில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் போர் உச்சநிலை அடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்கள் நிலை குறித்து, இலங்கை தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கமாக பேசினார்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படாமல் இருக்க வேண்டும் என்றால், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தை தமிழக அரசின் உதவியோடு, இந்திய அரசின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

தமிழக அரசு பலமுறை கோரியும், இலங்கை பிரச்சினை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஒருமித்த கருத்துக்களை முன்வைத்தும் கூட இலங்கை பிரச்சினை குறித்து இந்திய அரசு செயல்படாமல் இருப்பது எங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் வேதனையளிக்கிறது.

இலங்கை இராணுவத்தால் விரட்டப்பட்ட சுமார் 4 இலட்சம் தமிழ் மக்கள் முல்லைத்தீவில் ஒரு சிறிய இடைவெளியில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மக்கள் மீது சிங்கள இராணுவம் தினந்தோறும், குண்டுகள் போடுவதும், தாக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்கள்.

No comments: