Thursday, January 15, 2009

சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி கிடையாது : மத்திய அரசு

நிதி மோசடியால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு அரசு நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னணி ஐடி நிறுவனமான சத்யம் நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதாக அதன் தலைவர் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து இந்நிறுவனம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ கைது செய்யப்பட்டுள்ளார்.சத்யம் நிறுவனத்தின் இயக்குனர் குழு கலைக்கப்பட்டு புதிய இயக்குனர் குழுவை அரசு நியமித்துள்ளது.

சத்யம் நிறுவனத்தை மீட்பது தொடர்பாக இந்த குழு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. சத்யம் நிறுவனத்திற்கு அரசு நிதியுதவி அளித்து மீட்க வேண்டிய நிலை வரலாம் என கூறப்படுகிறது. எனினும் மத்திய தொழில் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் இதனை மறுத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் இல்லை என்று கூறினார். எனினும் சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கருத்தில் கொண்டு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே இயக்குனர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள கிரண் கார்னிக், சத்யம் நிறுவனத்திற்கு அரசு நிதியுதவி இப்போதைக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குவதில் இயக்குனர் குழு தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

No comments: