Monday, January 12, 2009

இலங்கையில் சண்டையை நிறுத்த கலைஞரிடம் கோரிக்கை : ராமதாஸ் பேட்டி

இலங்கையில் சண்டையை நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தியிடம் வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் ராமதாஸ், வீரமணி, திருமாவளவன் ஆகியோர் இன்று வேண்டுகோள் விடுத்தனர்.

முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நீடித்தது.

பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியது:

இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தை இலங்கை ராணுவம் அழித்து வருகிறது. 2004ல் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோதே முதல்வர், நாங்கள் உள்ளிட்ட 15 கட்சிகள் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கையெழுத்திட்டோம். அதில் 23ம் பக்கம் இலங்கையில் தமிழர் கோரிக்கை நிறைவேற அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவாக செயல்படுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இலங்கையில் தமிழ் இனம் அழியும் நிலையில் உள்ளது. முதல்வர் தலைமையில் எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளுக்கும் மரியாதை இல்லாமல் போய் விட்டது. முதல்வர் தலைமையில் நிறைவேற்றிய தீர்மானம், போராட்டங்களுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இது பற்றி முதல்வரிடம் விரிவாக பேசினோம். போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இது வரை வெளிப்படையாக சொல்லவில்லை. அமெரிக்கா, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் ராணுவ தீர்வால் பிரச்னையை தீர்க்க முடியாது என்று கூறி வருகின்றன.

எனவே மீண்டும் பிரதமர், சோனியாவிடம் பேசி இலங்கையில் சண்டையை நிறுத்த செய்யுங்கள் என்று முதல்வரிடம் கூறினோம். அதை அவர் ஏற்றுக் கொண்டார். இன்று பேசுவதாக தெரிவித்தார். அறிக்கை தருமாறும் முதல்வரை கேட்டுக் கொண்டோம். அங்கு போர் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வுக்கு வழி காண வேண்டும். இலங்கையில் சண்டை நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் நாங்கள் 3 பேரும் கையெழுத்திட்ட மனு கொடுத்தோம்.

No comments: