முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை, புதுச்சேரியில் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் கூடினார்கள். பின்னர், சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு தடுத்தார். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியதால், சத்தியமூர்த்தி பவனுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை புதுச்சேரியில் அவமதிக்கப்பட்டுள்ளது. இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியத்திடம் கேட்டறிந்தேன். ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் மட்டுமல்லாமல், இந்தியாவையே வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து சென்றவர். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் முயன்றவர். இலங்கையில் வாழும் தமிழர்களின் சம உரிமைக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர். தமிழர்கள் என்றும் நன்றி உடையவர்கள்.
புதுச்சேரியில் ராஜீவ்காந்தியின் சிலை அவமானப்படுத்தப்பட்டிருப்பது தமிழ் இனத்திற்கே அவமானம். தமிழின துரோகிகள் இதை செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இனியும் பொறுத்துக் கொள்ளாது. யாராலும் ராஜீவ்காந்தியின் புகழை குறைக்க முடியாது. தைரியமில்லாதவர்கள் இரவு நேரத்தில் இந்த செயலை செய்துள்ளனர். உடனடியாக புதுச்சேரி அரசு சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.
No comments:
Post a Comment