இலங்கை பிரச்சினை தொடர்பாக நேற்று 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உண்ணாவிரத பந்தலில் சோர்வான நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தனது சார்பில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை அனுப்பிவைத்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்.
இதேபோல் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் நேரில் வந்து உண்ணாநிலை போராட்டத்தை கைவிடும்படி வற்புறுத்தினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் அறிக்கையின் மூலமும் நேரில் வந்து சந்தித்தும் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டார். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
முல்லைத் தீவில் அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த விதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேயை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் போர் நிறுத்தம் குறித்து எதுவும் பேசவில்லை.
போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு பதிலாக உணவுப் பொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இரு நாடுகளின் நட்புறவு ஆழமாகவும், வலுவாகவும் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்துவதாக அமைந்து இருக்கிறது.
இந்திய அரசு தமிழ் இன விரோதியாக செயல்படுவதைத் தடுக்க தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும். இதேபோல் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்ட அனைத்து தமிழர்களும் ஒன்று சேரவேண்டும்.
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நானும், கருணாநிதியும் சேர்ந்து நாடகமாடுவதாக கூறி எனது உணர்வுகளை கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
எனது உண்ணாநிலை போராட்டத்திற்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. முதல்-அமைச்சர் மீது வீண் பழி சுமத்தவேண்டாம். இன்னும் சொல்லப் போனால் இந்த முடிவை எடுத்த என்மீது முதல்-அமைச்சருக்கு கோபமும், வருத்தமும்தான் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா தமிழ் இனத்திற்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். வைகோ உள்ளிட்ட தமிழ் உணர்வு உள்ள அனைவரும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறவேண்டும்.
ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற உண்மையான அக்கறை இருக்குமேயானால் காங்கிரஸ்- அ.தி.மு.க. கட்சிகளை தனிமைப்படுத்தவேண்டும். இதனை மிகுந்த உருக்கத்தோடும், இனமான உணர்வோடும் வைகோவுக்கும், கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுக்கும் பணிவான வேண்டுகோளாக விடுக்கிறேன்.
தமிழகத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே தமிழ் இன அழிவை தடுக்க முடியும். இது என்னுடைய குறைந்த பட்ச வேண்டுகோள்தான். குறிப்பாக வைகோ, தா.பாண்டியன், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இதனை கனிவோடு பரிசீலனை செய்யவேண்டும். இது சிக்கலான, நெருக்கடியானதொரு நேரம்.
மேற்கண்டவாறு திருமாவளவன் கூறினார்.
No comments:
Post a Comment