Friday, January 16, 2009

இலங்கையில் உடனே போர் நிறுத்தம் அவசியம்: இங்கிலாந்து பிரதமர்

இலங்கையில் நிகழும் கொடூரமான படுகொலைகள், வன்முறைகளை நிறுத்த உடனடி போர்நிறுத்தம் தேவை என இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுண் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் நேற்று புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், இலங்கை தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரதமர் பிரவுன் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து வாஸ் தெரிவிக்கையில், இலங்கை வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்திருந்த ஆயிரம் பொதுமக்களில் 100 பேரை இலங்கை படையினர் குண்டுகளை வீசி கொன்றுள்ளனர். அத்துடன் படையினர் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியரை படுகொலை செய்துள்ளனர்,என்று விரிவாக சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக பிரதமர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக ஐரோப்பிய ஒன்றியம் ஊடாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சாக்கோர்சி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர் அஞ்செலா மேர்க்கல் அம்மையாருடனும் கலந்துரையாடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments: