"இலங்கை அரசின் பயங்கரவாதம் மற்றும் அதன் இனவெறியை கண்டிக்கும் வகையில், இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும்'' என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகில் மனிதப் படுகொலைகளை நடத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்து வரும் இலங்கையின் போர் வெறிக்கு அதன் தமிழ் இன விரோத வெறி தான் காரணம். இலங்கையின் இந்த இனவெறிக்கு எதிராக உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் வாழ்கின்ற 7 கோடி தமிழர்களும் இவர்களோடு சேர்ந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் இலங்கை அரசின் இனவெறியை வன்மையாக கண்டித்து வருகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு சென்று 5 ஒருநாள் போட்டிகளிலும், வேறு சில போட்டிகளிலும் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் கிரிக்கெட் வாரிய தலைவராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு தலைவராக இருப்பவரும், தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் இடம் வகிக்கின்ற இந்த சமயத்தில், தமிழினப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்புவது என்று முடிவு எடுத்ததற்கு எப்படி இணக்கம் தெரிவித்தார்கள்? என்று புரியவில்லை. இது தமிழர்களிடையே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
விளையாட்டுக்களில் அரசியல் பிரச்சினைகளை புகுத்தக் கூடாது என்று சிலர் கூறலாம். ஆனால், அது ஒரு சார்பாக இருக்கக் கூடாது. அண்மையில் பயங்கரவாதிகள் சிலர் மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பல்லாயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை போர்ப்படையினரின் நடவடிக்கைகளும் ஒரு வகையில் பயங்கரவாதச் செயல்தான். இன்னும் சொல்லப்போனால், இலங்கை போர்ப்படையினரின் பயங்கரவாதம், மிகக் கொடுமையானது.
தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டிக்கும் வகையில் இந்தியாவும் முன்பு தென் ஆப்பிரிக்காவுடன் எத்தகைய விளையாட்டு உறவுகளையும் வைத்துக் கொண்டதில்லை. அந்த வழிமுறையைப் பின்பற்றி இப்போது, இலங்கை அரசின் பயங்கரவாதம் மற்றும் அதன் இனவெறியை கண்டிக்கும் வகையில், இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும்.
இலங்கையில் சண்டை நிறுத்தப்பட்டு தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காணப்பட்டு, இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வராத வரையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்ப மாட்டோம் என்ற முடிவினை கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டும்.
அதற்கு இந்திய அரசும் உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் வரும் காலங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் நிலை வரலாம். அத்தகைய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய அரசும் நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment