ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலத்துக்கு மேலாக இலங்கையில் தமிழின மக்களின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக தொடங்கப்பட்ட அறப்போர்-தந்தை செல்வா தலைமையில் நடைபெற்று-பல கட்டங்களைச் சந்தித்து இன்று உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி 1956-ம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நான் முன் மொழிந்ததும்-பெரியவர் பூவாளூர் பொன்னம்பலனார் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்டதுமான தீர்மானம் என்பதைக் கணக்கிடும்போது அந்த வாய்மைப் போரின் வழித்தடத்தில் நானும் நடந்து வந்திருப்பதையும்-அப்படி நடக்கும்போது; வசதி வாய்ப்புகளுக்கேற்ப- இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், உரிமைகளுடனும் வாழ்ந்திட என்னால் எந்த அளவுக்கு முடியுமோ; அந்த அளவுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சியில் இருந்தாலும் பாடுப்பட்டிருக்கிறேன்-இன்னமும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதையும் உலகெங்கும் இருக்கிற தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
1983-ம் ஆண்டு இந்த போராட்டத்தின் புரட்சிகரமான திருப்பமாகவும்-தியாகத்தின் சோகச் சின்னமாகவும்- அமைந்தது வெளிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர் உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்டோர் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும்.
என்னை சென்னை வந்து சந்தித்து இலங்கைப் பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்த தந்தை செல்வா 1977-ல் மறைந்த பிறகு, அவருடைய நெருங்கிய நண்பரும்- (சில ஆண்டுகளுக்கு முன்பு 1989-ல் கொல்லப்பட்ட) தமிழ்ப் பெரியவருமான நாவலர் அமிர்தலிங்கம் மற்றும் அவர் துணைவியார் மங்கையர்க்கரசி ஆகியோர்-இலங்கைப் பிரச்சினைகளை விளக்கி, அந்நாட்டில் தமிழ் மக்கள் அமைதியோடு வாழ்ந்திட இந்தியா உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தூய தூதர்களாக இங்கு வந்து பெரும் பணியாற்றியபோது பிரதமர் இந்திராகாந்தி போன்றவர்களைச் சந்தித்து அவர்களின் அந்த பணிக்கு நானும் துணையாக இருந்து தொண்டாற்றினேன்.
இலங்கையில் தொடர்ந்து தமிழர்களுக்கு சிங்கள அரசும், சிங்களவர்களும் கொடுத்த தொல்லை- புரிந்த கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல என்ற நிலை ஏற்பட; ஏற்பட; இலங்கைத் தமிழ் மக்களிடையே "இப்படி உயிரோடு மெல்ல மெல்லச் சாவதைவிட-ஒரேயடியாகச் சாகலாம் போரில்'' என்று முடிவெடுத்திடும் நிலை உருவாயிற்று.
அதன் விளைவாக இளைஞர்கள்; விடுதலை இயக்கங்கள் சிலவற்றைத் தோற்றுவித்தார்கள். எல்.டி.டி.ஈ. என்றும்-டெலோ என்றும்- இ.பி.ஆர்.எல்.எப். என்றும்-ஈராஸ் என்றும் - டி.யு.எல்.எப். என்றும்- பிளாட் என்றும்- இ.என்.டி.எல்.எப். என்றும்- புரோடெக் என்றும்- டி.இ.எல்.எப். என்றும் - இன்னும் பல பெயர்களில் தோன்றிய அந்த இயக்கங்கள்; ஆயுதம் ஏந்தி சிங்களப்படைகளையும்; சிங்களக் குண்டர்களையும் எதிர்க்கும் போராட்டங்கள்; தொடர்ந்து இல்லாமல் அவ்வப்போது நடைபெற்று இரு தரப்பிலும் உயிர்ப்பலிகளுடன் முடிவுற்றுக் கொண்டிருந்தன.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி நடைபெற்ற போதும், நமது ஆட்சி நடைபெற்ற போதும் அந்த இயக்கங்கங்களையும்- இயக்கங்களின் தலைவர்களையும் அறிந்தவர்களில் நானும் ஒருவன்-நானும், பேராசிரியரும், தமிழர் தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் இணைந்து நடத்திய மதுரை "டெசோ'' மாநாடு; 4௫௧986 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே நடத்தப்பட்டது. அந்த மாநாட்டுக்கு அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பாய், என்.டி.ராமராவ், எச்.என்.பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங், ராச்சய்யா, சுப்பிரமணியன் சுவாமி, உன்னிகிருஷ்ணன் மற்றும் பலர் வந்திருந்து கருத்து தெரிவித்து ஆதரவும் அளித்தனர்.
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைக்கு முடிவு காணவும், தமிழ் மக்கள் உரிமைகளுடன் வாழவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் அந்த மாநாட்டில் போராளிகள் சார்பாக கலந்து கொண்ட பல குழுக்களின் தலைவர்களிடையே ஒற்றுமையில்லை என்பதை வாஜ்பாய் போன்றோர் உணர்ந்து வருந்தி அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
நானும் அவர்களைத் தனியாக அமர வைத்துப் பேசி "தங்களுக்குள் சகோதர யுத்தம் தவிர்ப்போம்-ஒற்றுமையுடன் செயல்படுவோம்'' என்று கைபிடித்து உறுதிமொழி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். உறுதிமொழி வழங்கப்பட்டதும் உண்மை-அதையடுத்து டெலோ இயக்கத்தலைவர் சபாரத்தினம் கொல்லப்பட்டதும் உண்மை. சமருக்கஞ்சா சிங்கங்கள்-சகலகலா வல்லவர்கள்-சதிகளை சாய்ப்பவர்கள் என்றாலும்; சகோதர யுத்தத்தைக் கைவிட ஒப்பாத காரணத்தால்-ஒவ்வொரு இயக்கத்தலைவர்களும் கொலையுண்ட கெடுமை நடந்து-மாபெரும் சக்தியாகப் பெருகியிருக்க வேண்டிய விடுதலைப்படை, பலவீனமுற்றது என்பதை நடுநிலையாளர்கள் மறுத்திட இயலாது.
அவர்களின் சகோதர யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே நான் வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டும்-வீணாயிற்று அந்த முயற்சிகள். நானும், பேராசிரியரும் இலங்கைப் பிரச்சினைக்காகவே எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம். என் பிறந்த நாள் விழாவில் 3௬௧986 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உண்டியல் மூலம் நன்கொடையாகக் குவிந்த இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எல்.டி.டி.ஈ., தவிர மற்ற அமைப்புகள் என் வேண்டுகோளையேற்று நேரில் வந்து பெற்றுக்கொண்டார்கள். அதற்கு பின்னர் இலங்கையில் அமைதிப்படை- நடவடிக்கை-தமிழகம் வந்த இந்தியப் பிரதமர் இளம் தலைவர்-ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட மிகக் கொடுமையான நிகழ்ச்சி-இத்தனைக்கும் பிறகு; இன்னமும் இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உத்திரவாதம் அளிக்கும் நிலைமை உருவாகவில்லை.
இப்பொழுது இலங்கை ராணுவத்திற்கும்-இயக்கத்தின் தலைவர்கள் அல்லது தளபதிகளுக்கும் நடக்கிற போராட்டமாக நாம் இதை முக்கியமாக எடுத்துக் கொள்ளாமல்-யாருக்கிடையே போர் அல்லது சண்டை எனினும்-அங்கே இலங்கையில் செத்துக்கொண்டிருப்பது அப்பாவித் தமிழர்கள்தானே என்ற தாங்க முடியாத வேதனை நம்மைத் துளைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் நமது கழகமும், மற்றகட்சிகள் சிலவும், 14௰௨008 அன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்- 24௰௨008 அன்று மாபெரும் மனிதச்சங்கிலி நடத்தினோம்- டெல்லிக்கே 4௧2௨008 அன்று பிரதமரிடம் சென்று அனைத்து கட்சியினரும் முறையிட்டோம். வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விரைவில் அனுப்பப்படுவார் என்று பிரதமர் கூறினார்.
பிரணாப், இலங்கை செல்லும் நாள் இன்னும் குறிக்கப்படவில்லை. அது நமக்கு ஏமாற்றமேயாகும். இதற்கிடையே பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ், தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் என்னை 12௧௨009 அன்று சந்தித்து உடனடியாக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று வர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
நான் உடனே டெல்லியில் தொடர்பு கொண்டு; பேசுவதாக உறுதி அளித்தேன். நான் அவ்வாறு சொன்னதையேற்றுக் கொண்டு மூவரும் சென்றார்கள். இந்த மூவர் குழுவினர் என்னைச் சந்தித்து விவாதித்தபோது நான் அவர்களிடம் எடுத்துச் சொல்லியவாறு உடனடியாக டெல்லியுடன் தொடர்பு கொண்டு மத்திய மந்திரி தம்பி டி.ஆர்.பாலுவை, பிரதமரை சந்தித்து பேசுமாறு கூறி, அவரும் அவ்வாறு பேசி அதை அக்கறையோடு கவனிப்பதாக பிரதமரும் தெரிவித்து-அதைத் தொடர்ந்து மாநிலங்கள் அவை கழக உறுப்பினரும், என் மகளுமான கனிமொழி; சோனியாகாந்தியிடமும் மத்திய மந்திரி வயலார் ரவிடமும் நிலைமைகளை விளக்கிக் கூறி என்னுடைய கருத்துக்களையும் எடுத்துரைத்த நிலையில்- இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியிருப்பது ஆறுதலை அளிக்கிறது.
ஆனால் நண்பர் திருமாவளவன் மட்டும்; தன்னிச்சையாக யாரிடமும் அறிவிக்காமல் தானே ஒரு முடிவெடுத்து இந்த பிரச்சினையை வலியுறுத்தி ஒரு உண்ணா நோன்பை துவங்கியுள்ளார். எத்தனையோ பேரணிகள்-கண்டன ஊர்வலங்கள்-பல்லாயிரவர் திரண்ட மாநாடுகள்- உண்ணா நோன்புகள் போன்ற இத்தனையினாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமது உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம்.
இலங்கைப் பிரச்சினையில் ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன்.
இதனிடையே மத்திய அரசின் வெளி உறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும்-இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பது தான் நலம் என்றும்-நலமான முடிவுக்கு இந்தியப்பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment