Thursday, January 15, 2009

ஈழத்தமிழர் பிரச்சனை:திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதம்

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும்; அங்குள்ள அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
Image அதன் தொடர்ச்சியாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று ஈழப்போரை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

தாம்பரத்தை அடுத்த மறைமலை நகரில் நடைபெற்ற இந்த உண்ணா விரத போராட்ட தொடக்க நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் மன்சூர் அலிகான், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் விடுதலைச் செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டம் குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இலங்கையில் நித்தம் நித்தம் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டு வருகிறார்கள். உலக அளவில் தடை செய்யப்பட்ட பார்சல் குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்தி வருகிறது.

ஆனால் இதுவரை இலங்கையில் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை. தமிழக முதலமைச்சர் கருணாநிதியை பொறுத்தவரை தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டார்.

அண்மையில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போரை நிறுத்துமாறு வலியுறுத்தினார். ஆனால் அப்போது பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மத்திய அரசு இதுவரை இலங்கைக்கு அனுப்பவில்லை.

அதனால் தான் இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு தலையிடக்கோரியும், அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி தமிழர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துச்சொல்லும் விதமாகத்தான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன்.

எனவே மத்திய அரசு இனியும் ஆறரை கோடி தமிழக தமிழர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தக் கூடாது. வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் போரை நிறுத்துவதற்காக இலங்கை செல்வதாக தெரியவில்லை. வேறு விஷயமாகத்தான் அவர் செல்கிறார். இதனை இலங்கை அமைச்சரும் உறுதிப்படுத்தி இருக்கிறார். அத்துடன் போரை தீவிரப்படுத் துவோம் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.

அண்மையில் முதலமைச்சரை நானும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு ஒன்றை அளித்துவிட்டு வந்தோம். அவரும் பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் பேசி மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

இனியும் மத்திய அரசு இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கக் கூடாது. இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கோரிக்கையை வலியுறுத்தித்தான் தற்போது என்னுடைய காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன் என்றார் திருமாவளவன்.

திமுக எம்பி வசந்தி ஸ்டான்லி கணவர் திடீர் மரணம்

திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லியின் கணவர் ஸ்டான்லி ராஜன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.அவருக்கு வயது 46.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் வசந்தி ஸ்டான்லி. திமுக கழகத்தின் சிறந்த பேச்சாளரான இவர் ராஜ்யசபா திமுக எம்.பியாக உள்ளார். இவரது கணவர் ஸ்டான்லி ராஜன். மருந்து நிறுவனமும்,சினிமா தயாரிப்புத் தொழிலிலும் ஈடுபட்டுவந்தார்.சதயராஜ் நடித்த சுயேட்சை எம்எல்ஏ என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.இவர் மேலும் பல்வேறு திரைப்படங்கள் தயாரிக்கும் பணியிலும் ,ஊடகத் துறையிலும் தீவிரமாக களமிறங்கத் திட்டமிட்டிருந்தார்.அதற்கான பணிகளிலும் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

சென்னையில் இருந்த அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்தார்.

இதையடுதத்து அவரது உடல் நெல்லை கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.இதில் ஏராளமான திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிரபாகரனை நெருங்கிவிட்டோம் : இலங்கை ராணுவம் தகவல்

முல்லைத் தீவு நோக்கி முன்னேறிவரும் இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தங்கியிருக்கும் இடத்தை நெருங்கிவிட்டதாக சிங்கள் ராணுவம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ்ப்பாண தீபகற்பம் முழுவதையும் இலங்கை ராணுவம் விடுவித்திருப்பதாகவும், பிரபாகரனை பிடிக்க முல்லைத்தீவு சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அண்மையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியையும், அதன் அருகில் உள்ள பகுதிகளையும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. வடக்குப் பகுதியில் யானையிறவை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அதன் அருகில் உள்ள சுண்டிக்குளம் பகுதியையும் ராணுவம் மீட்டிருக்கிறது.

இந்த சுண்டிக்குளம் யாழ்ப்பாணத்தையும், இலங்கையின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் யாழ்ப்பாண தீபகற்பம் முழுவதையும் இலங்கை ராணுவம் புலிகளிடமிருந்து மீட்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சுண்டிக்குளம் பகுதியை இலங்கை ராணுவம் மீட்ட போது 850 தமிழர்களும் மீட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் என்றும், தற்போது அவர்களிடமிருந்து தப்பி வந்திருப்பதாகவும் ராணுவம் கூறுகிறது.

இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இலங்கை அரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சியை கைவிட்டு முல்லைத்தீவு பகுதிக்கு தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ராணுவம் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. பெரும் உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு முல்லைத் தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புலிகள் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தை முழுவதும் மீட்டு விட்ட ராணுவம் முல்லைத்தீவை சுற்றி வளைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது என்றும், சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர் என்றும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய் நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

கொரில்லா போர் முறையில் சிறந்து விளங்கும் புலிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், விமானப்படை, ராணுவம், கடற்படை ஆகிய மூன்றையும் முடுக்கி விட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் கடல் வழியாக பிரபாகரன் தப்பிச் செல்ல கூடும் என்பதால், கடற்பகுதி முழுவதும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், கடற்படை கப்பல்கள் மற்றும் படகுகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

சுண்டிக்குளத்தை பிடிக்க நடந்த தாக்குதலின் போது கடற்புலி பிரிவை சேர்ந்த மூத்த தளபதி திரு என்பவர் கொல்லப்பட்டதாக உதய் நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு சொந்தமான 100 படகுகள், 400 கண்ணிவெடிகள், பீரங்கிகளை அழிக்கும் 40 கண்ணி வெடிகள் ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.பிராபகரன் இருப்பிடத்தை நெருங்கிவிட்டோம் என்றும் புலிகள் தரப்பில் கடும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் கூறியுள்ள அவர், ராணுவ தரப்பில் எந்த சேதமும் இல்லை என்றார்.

சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி கிடையாது : மத்திய அரசு

நிதி மோசடியால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு அரசு நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னணி ஐடி நிறுவனமான சத்யம் நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதாக அதன் தலைவர் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து இந்நிறுவனம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ கைது செய்யப்பட்டுள்ளார்.சத்யம் நிறுவனத்தின் இயக்குனர் குழு கலைக்கப்பட்டு புதிய இயக்குனர் குழுவை அரசு நியமித்துள்ளது.

சத்யம் நிறுவனத்தை மீட்பது தொடர்பாக இந்த குழு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. சத்யம் நிறுவனத்திற்கு அரசு நிதியுதவி அளித்து மீட்க வேண்டிய நிலை வரலாம் என கூறப்படுகிறது. எனினும் மத்திய தொழில் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் இதனை மறுத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் இல்லை என்று கூறினார். எனினும் சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கருத்தில் கொண்டு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே இயக்குனர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள கிரண் கார்னிக், சத்யம் நிறுவனத்திற்கு அரசு நிதியுதவி இப்போதைக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குவதில் இயக்குனர் குழு தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடன் வர்த்தக உறவு துண்டிப்பு? ப.சிதம்பரம் எச்சரிக்கை

மும்பை மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து நடந்து வரும் புலனாய்வுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்தால் அந்த நாட்டுடன் இந்தியா வைத்துள்ள வர்த்தக தொடர்புகளை துண்டிக்க நேரிடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை நகரில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதில் சுமார் 200 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக் கானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கி உள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான புலனாய்வுக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் தவறினால் அந்த நாட்டுடன் இந்தியா வைத்துள்ள வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொடர்புகளை துண்டிக்க நேரிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக லண்டனில் வெளியாகும் "தி டைம்ஸ்' பத்திரிகைக்கு சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல தொடர்புகள் இருந்து வருவதாகவும், தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த புலனாய்வில் பாகிஸ்தான் உதவ மறுக்குமானால் இந்த தொடர்புகள் பலவீனமடைந்து துண்டித்துப் போகும் என்று கூறியுள்ளார்.

ஒத்துழைப்பு தராத பாகிஸ்தானில் வாழும் பாகிஸ்தானியரின் வர்த்தகம் வளர்வதற்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும்?

பாகிஸ்தானியர் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வதையும், இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு செல்வதையும் நாங்கள் ஏன் ஊக்குவிக்க வேண்டும்? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Monday, January 12, 2009

இலங்கையில் சண்டையை நிறுத்த கலைஞரிடம் கோரிக்கை : ராமதாஸ் பேட்டி

இலங்கையில் சண்டையை நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தியிடம் வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் ராமதாஸ், வீரமணி, திருமாவளவன் ஆகியோர் இன்று வேண்டுகோள் விடுத்தனர்.

முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நீடித்தது.

பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியது:

இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தை இலங்கை ராணுவம் அழித்து வருகிறது. 2004ல் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோதே முதல்வர், நாங்கள் உள்ளிட்ட 15 கட்சிகள் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கையெழுத்திட்டோம். அதில் 23ம் பக்கம் இலங்கையில் தமிழர் கோரிக்கை நிறைவேற அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவாக செயல்படுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இலங்கையில் தமிழ் இனம் அழியும் நிலையில் உள்ளது. முதல்வர் தலைமையில் எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளுக்கும் மரியாதை இல்லாமல் போய் விட்டது. முதல்வர் தலைமையில் நிறைவேற்றிய தீர்மானம், போராட்டங்களுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இது பற்றி முதல்வரிடம் விரிவாக பேசினோம். போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இது வரை வெளிப்படையாக சொல்லவில்லை. அமெரிக்கா, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் ராணுவ தீர்வால் பிரச்னையை தீர்க்க முடியாது என்று கூறி வருகின்றன.

எனவே மீண்டும் பிரதமர், சோனியாவிடம் பேசி இலங்கையில் சண்டையை நிறுத்த செய்யுங்கள் என்று முதல்வரிடம் கூறினோம். அதை அவர் ஏற்றுக் கொண்டார். இன்று பேசுவதாக தெரிவித்தார். அறிக்கை தருமாறும் முதல்வரை கேட்டுக் கொண்டோம். அங்கு போர் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வுக்கு வழி காண வேண்டும். இலங்கையில் சண்டை நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் நாங்கள் 3 பேரும் கையெழுத்திட்ட மனு கொடுத்தோம்.

போர் தொடர்ந்தால் தமிழினம் அழிந்துவிடும் : இலங்கை எம்.பி.க்கள் வருத்தம்

இலங்கையில் போர் தொடர்ந்தால் தமிழினம் அழிந்துவிடும் என்றும் தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று இலங்கை தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்திய அரசின் மேற்பார்வையில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் போர் உச்சநிலை அடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்கள் நிலை குறித்து, இலங்கை தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கமாக பேசினார்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படாமல் இருக்க வேண்டும் என்றால், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தை தமிழக அரசின் உதவியோடு, இந்திய அரசின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

தமிழக அரசு பலமுறை கோரியும், இலங்கை பிரச்சினை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஒருமித்த கருத்துக்களை முன்வைத்தும் கூட இலங்கை பிரச்சினை குறித்து இந்திய அரசு செயல்படாமல் இருப்பது எங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் வேதனையளிக்கிறது.

இலங்கை இராணுவத்தால் விரட்டப்பட்ட சுமார் 4 இலட்சம் தமிழ் மக்கள் முல்லைத்தீவில் ஒரு சிறிய இடைவெளியில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மக்கள் மீது சிங்கள இராணுவம் தினந்தோறும், குண்டுகள் போடுவதும், தாக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்கள்.