Thursday, January 15, 2009

சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி கிடையாது : மத்திய அரசு

நிதி மோசடியால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு அரசு நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னணி ஐடி நிறுவனமான சத்யம் நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதாக அதன் தலைவர் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து இந்நிறுவனம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ கைது செய்யப்பட்டுள்ளார்.சத்யம் நிறுவனத்தின் இயக்குனர் குழு கலைக்கப்பட்டு புதிய இயக்குனர் குழுவை அரசு நியமித்துள்ளது.

சத்யம் நிறுவனத்தை மீட்பது தொடர்பாக இந்த குழு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. சத்யம் நிறுவனத்திற்கு அரசு நிதியுதவி அளித்து மீட்க வேண்டிய நிலை வரலாம் என கூறப்படுகிறது. எனினும் மத்திய தொழில் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் இதனை மறுத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் இல்லை என்று கூறினார். எனினும் சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கருத்தில் கொண்டு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே இயக்குனர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள கிரண் கார்னிக், சத்யம் நிறுவனத்திற்கு அரசு நிதியுதவி இப்போதைக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குவதில் இயக்குனர் குழு தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடன் வர்த்தக உறவு துண்டிப்பு? ப.சிதம்பரம் எச்சரிக்கை

மும்பை மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து நடந்து வரும் புலனாய்வுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்தால் அந்த நாட்டுடன் இந்தியா வைத்துள்ள வர்த்தக தொடர்புகளை துண்டிக்க நேரிடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை நகரில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதில் சுமார் 200 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக் கானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கி உள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான புலனாய்வுக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் தவறினால் அந்த நாட்டுடன் இந்தியா வைத்துள்ள வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொடர்புகளை துண்டிக்க நேரிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக லண்டனில் வெளியாகும் "தி டைம்ஸ்' பத்திரிகைக்கு சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல தொடர்புகள் இருந்து வருவதாகவும், தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த புலனாய்வில் பாகிஸ்தான் உதவ மறுக்குமானால் இந்த தொடர்புகள் பலவீனமடைந்து துண்டித்துப் போகும் என்று கூறியுள்ளார்.

ஒத்துழைப்பு தராத பாகிஸ்தானில் வாழும் பாகிஸ்தானியரின் வர்த்தகம் வளர்வதற்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும்?

பாகிஸ்தானியர் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வதையும், இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு செல்வதையும் நாங்கள் ஏன் ஊக்குவிக்க வேண்டும்? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Monday, January 12, 2009

இலங்கையில் சண்டையை நிறுத்த கலைஞரிடம் கோரிக்கை : ராமதாஸ் பேட்டி

இலங்கையில் சண்டையை நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தியிடம் வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் ராமதாஸ், வீரமணி, திருமாவளவன் ஆகியோர் இன்று வேண்டுகோள் விடுத்தனர்.

முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நீடித்தது.

பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியது:

இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தை இலங்கை ராணுவம் அழித்து வருகிறது. 2004ல் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோதே முதல்வர், நாங்கள் உள்ளிட்ட 15 கட்சிகள் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கையெழுத்திட்டோம். அதில் 23ம் பக்கம் இலங்கையில் தமிழர் கோரிக்கை நிறைவேற அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவாக செயல்படுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இலங்கையில் தமிழ் இனம் அழியும் நிலையில் உள்ளது. முதல்வர் தலைமையில் எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளுக்கும் மரியாதை இல்லாமல் போய் விட்டது. முதல்வர் தலைமையில் நிறைவேற்றிய தீர்மானம், போராட்டங்களுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இது பற்றி முதல்வரிடம் விரிவாக பேசினோம். போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இது வரை வெளிப்படையாக சொல்லவில்லை. அமெரிக்கா, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் ராணுவ தீர்வால் பிரச்னையை தீர்க்க முடியாது என்று கூறி வருகின்றன.

எனவே மீண்டும் பிரதமர், சோனியாவிடம் பேசி இலங்கையில் சண்டையை நிறுத்த செய்யுங்கள் என்று முதல்வரிடம் கூறினோம். அதை அவர் ஏற்றுக் கொண்டார். இன்று பேசுவதாக தெரிவித்தார். அறிக்கை தருமாறும் முதல்வரை கேட்டுக் கொண்டோம். அங்கு போர் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வுக்கு வழி காண வேண்டும். இலங்கையில் சண்டை நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் நாங்கள் 3 பேரும் கையெழுத்திட்ட மனு கொடுத்தோம்.

போர் தொடர்ந்தால் தமிழினம் அழிந்துவிடும் : இலங்கை எம்.பி.க்கள் வருத்தம்

இலங்கையில் போர் தொடர்ந்தால் தமிழினம் அழிந்துவிடும் என்றும் தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று இலங்கை தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்திய அரசின் மேற்பார்வையில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் போர் உச்சநிலை அடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்கள் நிலை குறித்து, இலங்கை தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கமாக பேசினார்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படாமல் இருக்க வேண்டும் என்றால், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தை தமிழக அரசின் உதவியோடு, இந்திய அரசின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

தமிழக அரசு பலமுறை கோரியும், இலங்கை பிரச்சினை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஒருமித்த கருத்துக்களை முன்வைத்தும் கூட இலங்கை பிரச்சினை குறித்து இந்திய அரசு செயல்படாமல் இருப்பது எங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் வேதனையளிக்கிறது.

இலங்கை இராணுவத்தால் விரட்டப்பட்ட சுமார் 4 இலட்சம் தமிழ் மக்கள் முல்லைத்தீவில் ஒரு சிறிய இடைவெளியில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மக்கள் மீது சிங்கள இராணுவம் தினந்தோறும், குண்டுகள் போடுவதும், தாக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., தமிழக பொது செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருநாவுக்கரசர் எம்.பி. பேசியதாவது:-

இலங்கையில் தமிழர்கள் தினமும் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்கள் படும் துன்பம் சொல்லிமாளவில்லை. இது பற்றி மத்திய அரசிடம் எவ்வளவு சொல்லியும் நடவடிக்கையில்லை. பிரதமர் வாக்கு கொடுத்த பிறகும் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லவில்லை. அவர் செல்வாரா என்பதும் தெரியவில்லை.

கிளிநொச்சியில் இருந்து 11/2 லட்சம் தமிழர்கள் வெளியேறி உள்ளனர். அவர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. இந்திய அரசு இலங்கை அரசுக்கு துணைபோகிறது. இந்த நிலை மாற வேண்டும். மத்திய அரசு தலையிட்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழி காண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் இல.கணேசன் பேசும்போது, "மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் தமிழர்கள் படும்பாட்டை கண்டும் காணாமல் இருக்கிறது. அங்கே வாழும் இந்துக்கள் கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இது இலங்கை பிரச்சினை அல்ல. இந்திய பிரச்சினை. இதை நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலங்கை பிரச்சினையில் தீர்வு காண வேண்டும்'' என்றார்.

இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேசும்போது, "அமைதி வழிக்கு 2 வழிகளில் தீர்வு காண முடியும். ஒன்று போரை நிறுத்தினால் அமைதி கிடைக்கும். மற்றொன்று சுடுகாட்டு போகும் படி செய்தால் அமைதி கிடைக்கும். இதில் எந்த வழியில் மத்திய அரசு எங்களுக்கு உதவ போகிறது என்று தெரியவில்லை. இது இந்திய நாட்டின் 100 கோடி மக்களின் பிரச்சினையாக கருதி விரைவில் ஒரு நல்ல முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

பழ.நெடுமாறன் பேசும்போது, "பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் இலங்கையில் எந்த தமிழரும் கொல்லப்படவில்லை. இலங்கை நாட்டில் இந்தியா நாட்டு கப்பல் படைகள் சுற்றி வரவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையை இந்திய நாட்டு கப்பல் படை காவல் காத்து கொண்டு இருக்கிறது. இது எல்லாம் மக்களுக்கு தெரியும்'' என்று குறிப்பிட்டார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் மீண்டும் தேர்தல்?: சிபு சோரன் எச்சரிக்கை

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி சிபுசோரன் நேற்று ராஜினாமா செய்தார். தனது கட்சியை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்காவிட்டால் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில், துணை முதல்-மந்திரி பாபுலால் மராண்டியும் ராஜினாமா செய்தார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான சிபுசோரன், ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியாக கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். பதவியேற்று ஆறு மாதத்துக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதால் தாமர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று நெருக்கடி எழுந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் அவர் பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை.

இந்த சூழ்நிலையில், சிபுசோரனுக்கு எதிராக செயல்பட்டு வருபவரும், அவருடைய தோல்விக்கு காரணமானவருமான துணை முதல்-மந்திரி பாபுலால் மராண்டி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "இடைத் தேர்தலில் தோல்வி அடைந்த உடனேயே முதல்-மந்திரி பதவியை சிபுசோரன் ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை. எனவே, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்'' என்றார்.

மராண்டி ராஜினாமா செய்த சிறிது நேரத்துக்குள் கவர்னர் மாளிகைக்கு சிபுசோரன் வந்தார். கவர்னரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இதற்கிடையே, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டசபை கட்சி தலைவராக 53 வயதான சம்பி சோரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதல்-மந்திரி பதவி அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கு சிபுசோரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து சிபுசோரன் கூறும்போது, "ஜனநாயக நடைமுறையின் கீழ், எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன். சம்பி சோரனை முதல்-மந்திரி வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். இதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன். மாநிலத்தில் உள்ள கூட்டணி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் யாரும் வரவில்லை. சம்பி சோரனை முதல்-மந்திரி ஆக்காவிட்டால் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்'' என்றார்.

விப்ரோ உள்பட 5 நிறுவனங்கள் முறைகேடு: உலக வங்கி தடை

முறைகடுகளில் ஈடுபட்டதால், "விப்ரோ'' உள்பட 5 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்து உள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவில் முறைகேடு நடந்தது வெளிப்பட்டு இருக்கிறது. இது இந்தியா முழுவதும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சத்யம் நிறுவனத்தை, உலக வங்கி 8 ஆண்டுகளுக்கு தடை செய்து உள்ளது.

இந்த நிலையில், மேலும் 5 நிறுவனங்கள், பல முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்து இருக்கிறது. அந்த நிறுவனங்கள் வருமாறு:-

1. விப்ரோ டெக்னாலஜிஸ். 2. மெகா சாப்ட், 3. நெஸ்டர் பார்மாசூட்டிக்கல்ஸ், 5. கேப் இண்டர்நேஷனல், 5. சுரேந்திரா சிங்.

இவற்றில் நெஸ்டர் பார்மாசூட்டிக்கல்ஸ், கேப் இண்டர் நேஷனல் ஆகியவை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்ல. சுரேந்திரா சிங், தனி நபர் ஆவார்.

இந்த 5 நிறுவனங்களுக்கும் 2011-ம் ஆண்டு வரை உலக வங்கி தடை விதித்து இருக்கிறது. இந்த 5 நிறுவனங்களும், வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாலும், பல விதிமுறைகளை மீறி இருப்பதாலும், இந்த நடவடிக்கையை உலக வங்கி மேற்கொண்டு இருக்கிறது.

இதன்படி, தடை செய்யப்பட்ட 5 நிறுவனங்களும், உலக அளவில் பல்வேறு காண்டிராக்ட்களை நேரடியாக பெற முடியாது.

இதுகுறித்து விப்ரோ, மெகா சாப்ட் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக வங்கியின் இந்த அறிவிப்பால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வருவாய் இழப்பு ஏற்படாது'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் சர்வதேச அளவில் 100 நிறுவனங்களை உலக வங்கி தடை செய்து இருக்கிறது. இதில், குர்பிரீத் சிங் மாலிக், விக்ரம் தீபக், கமல் ஷர்தா, ஷர்தா இபெக்ஸ், லாப் சிங் கில், லாப் யுனிவர்சல், பிரதீப் மேனன், சிவ்ஷங்கர் நாயர், பிரதீப் எஸ்.நாயர், மன்தீப் எஸ்.சந்து போன்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், அவர்களது நிறுவனங்களும் உள்ளன.