Tuesday, February 3, 2009

இலங்கை தமிழர்களுக்காக ஆட்சியை இழக்கமாட்டோம்;முதல்வர்

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக மாநில அரசை இழக்கமாட்டோம் என முதல்வர் ஆவேசமாக கூறினார்.இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து திமுக கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. அதற்காக வாதாடியும், போராடியும் வருகிறது. என்றும் இந்த நிலையில் தொடர்வோம் என்று முதல்வர் கூறினார்.மேலும் இலங்கை தமிழர்களுக்காக பேரணி மற்றும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்துவது என தி.மு.க. செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க திமுக செயற்குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை அறிவாலயத்தில் நடைபெற்றது.செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரவும்-அநத நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும்-ஜனநாயக முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும்- ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர்கள், மற்றும் அரசியல் கட்சி களைக் கொண்டு- "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'' என்ற அமைப்பின் பெயரால்-தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பிரச்சார சாதனங்களைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானிக்கின்றது.

முதற்கட்டமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் சுயாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டு மென்றும் இந்தச் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை, மக்கள் மன்றத்தில் விளக்கி, ஆதரவு திரட்டி வலிமை சேர்த்திட, தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பிரச்சார விளக்கப்பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் வருகிற 7-ந்தேதி சென்னையிலும், 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத்தலைநகரங்களிலும் நடத்துவதென்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.


இலங்கை தமிழர்களுக்காக மத்திய ஆட்சியிலிருந்து விலக மாட்டோம்; மாநில அரசையும் இழக்க மாட்டோம்; திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனை தான் முக்கியம்; பிரபாகரனையோ மற்ற தமிழர் தலைவர்களையோ ஆதரிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையில் ராமதாஸ், ஜெயலலிதா போன்றவர்களின் சதிச் செயல்களுக்கு ஆளாக மாட்டோம் என்றும் கருணாநிதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமார் சென்னையில் தீக்குளித்து இறந்தார். இலங்கைப் போர் பற்றி போராட்டங்கள் நடத்தி வந்த கட்சிகள், அமைப்புகள் எல்லாம் இப்போது ஓரணியில் திரண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளன.


எனவே இப் பிரச்னையில் மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் மத்திய அரசில் இருந்து திமுக அமைச்சர்கள் ராஜிநாமா அல்லது மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் போன்ற முக்கிய முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

1 comment:

Unknown said...

தம்பி வீரமணிக்கு எப்படி மாநில அரசின் தயவு தேவையோ அதுபோல சன், கலைஞர் டிவி மற்றும் குடும்பத்தின் அத்துணை எண்ணமுடியா சொத்துக்களையும் பாதுகாக்க மத்திய அரசின் தோழமை என்றும் காலகாலத்துக்கும் எனக்கு தேவை.

இலங்கை சனியன்களுக்காக மாதர் குல மாணிக்கத்தையும் தமிழகத்து பூதகியையும் இணைய வைத்து நான் இன்னல் அடைய வேண்டுமா?