தமிழ்நாடு போலீசாருக்கு மிகப் பெரும் சவாலாக திகழ்ந்த `மாயாவி' வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அணை அருகே மூலக்காடு வனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் வீரப்ப னுக்கு நினைவு மண்டபம் கட்ட அவரது மனைவி முத்து லட்சுமி திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக முத்துலட்சுமி கூறியதாவது:-
எனது கணவர் வீரம் மிக்கவர், அதே சமயத்தில் ஏழை-எளியவர்களிடம் பரிவுடன் பழகி வந்தார். நயவஞ்சக செயல் மூலம் அவரை கொன்று விட்டனர்.
மூலக்காட்டில் அவர் சமாதி உள்ள இடத்தில் நான் நினைவகம் கட்ட உள்ளேன். இதற்கான பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும். அந்த இடத்தில் எனது கணவரின் முழு உருவ வெண்கல சிலை ஒன்றையும் நிறுவ போகிறேன்.
எனது கணவர் தமிழக எல்லையை காக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இதை இப்போது தான் எல்லைப் பகுதி மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். தினம், தினம் என் கணவர் சமாதிக்கு வந்து மண் எடுத்துச் செல்கிறார்கள்.என் கணவர் ஆத்மாவை அவர்கள், "எல்லைச்சாமி'' ஆக பார்க்கிறார்கள்.
இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.
தர்மபுரியிலும் "மாயாவி'' வீரப்பனுக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடரை இயக்கி வரும் டைரக்டர் ஜி.கவுதமன் யோசனையின் பேரில், பா.ம.க. நிர்வாகி சிவகுமார் இந்த சிலையை உருவாக்கி வருகிறார்.
இதுபற்றி சிவகுமார் கூறு கையில், "2 லட்சம் ரூபாய் செலவில் வீரப்பனுக்கு சிலை செய்து வருகிறேன். தர்மபுரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தாத்த நாயக்கன் பட்டியில் என் சொந்த நிலத்தில் இந்த சிலை நிறுவப்படும்'' என்றார்.
அடுத்த மாதம் (ஜுன்) வீரப்பன் சிலை திறப்பு விழா தர்மபுரியில் நடக்க உள்ளது. இதில் டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை தமிழ்சங்க நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment