Friday, July 4, 2008

'தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ்' அத்வானி

மழை மேகங்களுக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். தேர்தல் மேகங்கள் தென்படுகின்றன. தொடைதட்டும் ஓசைகள் அரசியலில் கேட்கத்தொடங்கிவிட்டன.

தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்கிறார் காங்கிரஸ் தலைவி. தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ் என்கிறார் அத்வானி. வாயில் வருவதெல்லாம் கோதைக்கு பாட்டு என்கிற மாதிரி லாலு சொல்லுகிறதெல்லாம் ஜோக்காகிப்போய்விட்டது. கனவில் கூட அத்வானி பிரதமராக முடியாது என்கிறார் லாலு. இடதுசாரிகளை பார்லிமெண்டில் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகிக்கொண்டிருக்கிறது. சமாஜ்வாதியின் சகாயத்தினால் ஆட்சி சரிந்துபோகாது என்று தெரிகிறது.

மத்தியில் தேர்தல் மேகங்களால் தமிழ்நாட்டிலும் குளிர்காற்று வீசத்தொடங்கிவிட்டது. 'அண்ணன் எப்போது வெளியேறுவான்...திண்ணை எப்போது காலியாகும்' என்று நான்கு வருடங்களாக காத்திருக்கிறது பிரதான எதிர்க்கட்சி.

'பசித்தவனுக்கு குழம்பெல்லாம் வேண்டாம்' என்கிற மாதிரி கிடைக்கிற ஆட்களை கட்சிக்குள் கொண்டுவரும் வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது அம்மாவின் அணி.

'இரண்டிலொன்றில் இணையமாட்டோமா...இரண்டொரு இடங்களாவது கிடைக்காதா' என்று கணக்குபோடும் நடிகர்களின் அண்மைக்கால கட்சிகள்...
'சூடிய பூவாக இருந்தாலும் பரவாயில்லை. வாடிய பூ வேண்டாம்' என்று ஏதாவதொரு நடிகரின் துணையைத் தேடும் திராவிடக்கட்சிகள்...
"கட்சியாக இருப்பவர்களுக்குத்தான் கவலை. குழுக்களாக இருக்கும் எங்களுக்கென்ன கவலை.
சொந்தக் காரியம் ஜிந்தாபாத். இருக்கவே இருக்கிறது டெல்லி காட்டும்பாதை" என்கிறது காமராஜ் ஆட்சி என்கிற சொப்பனத்தில் இருக்கும் காங்கிரஸ்.

பதவிசுகம் அனுபவித்து விட்ட பாட்டாளிகளோ காற்று வீசும் திசைக்காக காத்திருக்கிறார்கள்.

மாநிலத்தில் அமையப்போகும் அணிகள் மத்தியில் அமையப்போகும் அணிகளுக்காக காத்திருக்கின்றன. வளைந்து போனாலும் வழியோடு போகணுமல்லவா?
இயங்கிக்கொண்டிருக்கும் 'லாபி' கள் இப்போது ஓவர்டைம் செய்து கொண்டிருக்கின்றன. "மத்தியிலும் பதவி வேண்டும். மாநிலத்திலும் பதவிவேண்டும். அதுமாதிரி ஏதாவது பாரப்பா..?"
இது அதிகார மையங்களின் கட்டளை. 'ஃபீலர்'களின் வாகனங்களுக்கு பெட்ரோல் கூடுதலாக தேவைப்படுகிறது.

தேர்தல் லாவணியில் கேள்விகளும் எதிர்க்கேள்விகளும் சாதாரணமாக இருக்கப்போவதில்லை. பதவி சுகத்தில் இருந்தவர்களுக்கு முள்ளாய் குத்தும் கேள்விகள் தயாராகிவிட்டன. விலைவாசி ஏன் உயர்ந்தது? விலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் என்ன செய்தது? நீயும்தானே ஆட்சியில் இருந்தாய்? நீ என்ன செய்துவிட்டாய்? நீ ஏன் ராஜினாமா செய்யவில்லை?

மதுக்கடையை ஏன் திறந்தாய்?
மணல்கொள்ளையில் ஆதாயமா?
பதுக்கலைப்பார்த்து ஏன் பதுங்கிப்போனாய்? இப்படிப்போகும் கேள்விகள்.


அன்னாடங்காச்சி பகல் கஞ்சி குடித்துவிட்டு அரைத்தூக்கத்தில் இருந்தார். மாலைநேரக்கல்லூரிக்குப் போன அவருடைய மகன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.,

"ஏண்டா, காலேஜுக்கு போவலை?"
"இல்லேப்பா, காலேஜு இல்லை."
"என்னடா ஆச்சு?'
"சாயந்திர காலேஜுக்கு வாத்தியாரெல்லாம் இன்னும் போடலியாம். லெக்சரர் எல்லாம் வந்தப்புறம் வாங்கன்னு எளுதிப்போட்டிருக்கு"
"எப்போ வருவாங்களாம்?"
"அரசாங்கத்துலேந்து ஆர்டர் போட்டு புது லெக்சரர் போடணுமாம்.
அடுத்தவாரம் வந்து பாருங்கன்னு சொல்லிட்டானுக."
"யாருடா சொன்னது?"
"பிரின்ஸ்பால்தான்"
"அது என்னடா பிரின்ஸ்பாலெ மரியாதெ இல்லாமெ பேசுறே?"
"காலேஜுலே எல்லாரும் அப்பிடித்தான் சொல்லுவானுக. அது பலக்கமாயிப்போச்சு"
"ஏய்...அது என்னடா பலக்கம்...? பழக்கம்னு சொல்லுடா?"
"இப்போதானே செம்மொழி கட்டிடம் தொறந்திருக்காங்க. கொஞ்சநாள் போவட்டும். கத்துக்குடுவேன்."
- அன்னாடங்காச்சி

Wednesday, June 25, 2008

அண்ணா பல்கலைகழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்?

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனத்தில், வேந்தரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தற்போதைய துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்போகிறாரா? அல்லது அரசு தரப்பு நிர்பந்தத்துக்கு பணிந்து புதிய துணைவேந்தரை நியமிக்கப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதனின் பதவிக்காலத்துக்குப் பின் அடுத்த துணைவேந்தரை நியமிக்க பரிந்துரை செய்யும் குழுவை நியமனம் செய்திருந்தனர். குழுவில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தங்கவேலு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.எஸ். பழனிச்சாமி, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, உலகத் தரத்திற்கு அதன் செயல்பாடுகளை உருவாக்கியவர் விஸ்வநாதன்.

இவரது பதவிக்காலம் வரும் 27-ம் தேதியுடன் முடிவ டைகிறது. விஸ்வநாதனின் பதவியை நீட்டிப்புச்செய்யவோ, புதிய துணைவேந்தரை பரிந்துரைக்கவோ 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள், அரசுத் தரப்பில் மிரட்டப்படுவதாக புகார் எழுந்தது.

அரசுத் தரப்பிலிருந்து புதிய துணைவேந்தருக்கான பட்டியலையும் குழுவினரிடம் அளித்துள்ளனர். ஆனால் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தங்கவேலு, எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் தற்போதைய துணைவேந்தர் விஸ்வநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பரிந்துரைக்கவே விரும்பினர்.

ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் தற்போதைய துணை வேந்தர் விஸ்வநாதன் பதவியை நீட்டிக்கவே விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது.

அதனால் தேர்வு மற்றும் பரிந்துரைக் குழுவினர் மிரட் டப்பட்டு அரசு தரப்பில் அளிக்கப்படும் பட்டியலில் உள்ள 3 பேரை புதிய துணைவேந்தர் பதவிக்குப் பரிந்துரை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க அதிகாலை இணைப்பில் http://www.adhikaalai.com/index.php?/en/சிறப்புக்கட்டுரை/சிறப்புக்கட்டுரை/அண்ணா-பலகலைகழகத்தின்-அடுத்த-துணைவேந்தர்-யார்

Thursday, June 19, 2008

கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா?" - இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்

பகவத் கீதையை மேற்கோள் காட்டும் கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பெண்கள் சீரழிந்து கெட்டுப் போவதால்தான் வர்ண ஆசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றனர் என்று பகவத் கீதையில் உள்ளதாக பொருள் சொல்லி இருக்கிறார் கனிமொழி.

தந்தையைப் போலவே மகளும் தெரியாத விஷயத்தை பற்றி ஆவேச விளக்கம் சொல்லியிருக்கிறார். கீதையை மேற்கோள் காட்டுவதோ, உபநிஷத்தை, மகாபாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை மேற்கோள் காட்டுவது என்பதோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

உலகத்தின் அத்தனை மரபுகளும், மதங்களும், கோட்பாடுகளும், கொள்கைகளும், இலக்கியங்களும், படைப்புகளும், ஒரு மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கையில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார்.

கீதையைக் கூறிய கனிமொழி, பைபிள், குரான் போன்ற நூல்களில் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கும் உதாரணங்களைக் கூறத் தயாரா? அப்படி மேற்கோள் காட்டினால் அவரை துரத்தி, துரத்தி, துரத்தி விரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பார்கள். அல்லது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் போல நாடு கடத்தி இருப்பார்கள். முதலமைச்சரின் மகள் என்ற திமிரோடு பேசுவதை கனிமொழி நிறுத்திக் கொள்ளவேண்டும்.

கனிமொழிக்கு தைரியம் இருக்குமேயானால் பகவத் கீதை பற்றி விஷயம் தெரிந்தவர்களோடு விவாதிக்க தயாரா? அப்படியானால் அவருக்கு வசதியான தேதி, பொது இடம் குறிப்பிடட்டும்.

Monday, May 12, 2008

சாருநிவேதிதா-வுக்கு எச்சரிக்கை : அமிர்தம் சூர்யா

எழுத்தாளர் ஜெயமோகனை விமர்சிப்பது; எதிர்வினை புரிவது; வழக்கு தொடுப்பது; மன்னிப்பு கேட்க சொல்லி உரிமை காப்பது எதுவும் தவறில்லை. ஆனால் இம்மாதிரியான விசயங்களை யார்? எதன் பொருட்டு? எந்த அரசியலின் அடிப்படையில் சொல்கிறார்கள்? அதனில் உண்மையில் விகிதாச்சாரம் என்ன? என்பதுதான் அதன் கேள்வி.
'ஜெயமோகனின் சுயமோகம்' என்ற தலைப்பில் சாருனிவேதிதா எழுதியிருப்பதை படித்தபின் நமக்கு புலப்படுவது......

ஜெயமோகனின் சுயமோகத்தை சொல்லிக்கொண்டெ இடையிடையே தனது புகழை, பயணத்தை, தனது பெருமையான கட்-அவுட்டுகளை நடுவதற்காக நட்டுக்கொண்டே தனது மோகத்தை பரைசாற்றி கொள்கிறார் சாரு. உண்மையில் ஜெயமோகன் இருக்கையில், கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொள்வதும், காலச்சுவடு போனதும் கிண்டலடித்து புத்தகம் போடுவதும் தனது தற்புகழ்ச்சிக்காக விலைபோவதும் கேவலமான ஒன்று.

மனுஷ்யபுத்திரனுக்கு ஜெயமோகன் தேவைப்பட்டார், ஜெயமோகனுக்கு உயிர்ம்மை தேவைப்பட்டது. அதனால் காலச்சுவடு எதிரியானது. உயிர்மையின் கருத்து ஒவ்வாமை மற்றும் அரசியல் லாப சமரசம் இவற்றால் ஜெயமோகன் காலச்சுவடு போனார். ஜெயமோகனுக்கு காலச்சுவடு தேவைபட்டது. முன்பு காலச்சுவட்டில் இருந்த சாரு இப்போது உயிர்ம்மை சார்பில் நின்று தாக்குகிறார்.

இது கருத்தியல் மற்றும் படைப்பை முன்வைத்து நிகழும் யுத்தமல்ல. உயிர்ம்மை-காலச்சுவடு- க்கு இடையேயான நிறுவனப்போர். இது முழுக்க முழுக்க வியாபாரம். அதன் பொருட்டான அரசியல் மற்றும் அவர்களின் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள, சம்மந்தபட்ட வியாபார போட்டி. அதனூடாக சாரு தன்னை கட் அவுட்டாக நிறுத்திக்கொள்ள இது ஒரு காழ்ப்பு-பிரதி என்பதாக கவிகள், விமர்சகர்கள் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் கருத்தாக ஒரு கோட்டத்தில் முன்வைக்கபட்டுள்ளது.

பக்கம் 53-ல் மனுஷ்யபுத்திரனை அவருடைய பிறவி குறையை கேலி செய்து ஜெயமோகன் எழுதியதாக சாரு எழுதியுள்ளார். இது அபத்தமானது. சொல்புதிது இதழில் வெறொருவர் எழுதியது. இதழில் பிரசுரமானதாலேயே அது ஜெயமோகன் எழுதியாகாது. பக்கம் 52-ல் தமிழ் பண்பாட்டை கீழ்த்தரமாக ஜெயமோகன் பேசிவிடுகிறார் என்கிறார் சாரு. மேலும் அவர் எழுத்தை படித்தால் அசிங்கத்தை மிதித்ததுபோல் இருக்கிறது என்கிறார்.

சபாஷ்.....

Tuesday, May 6, 2008

ஓர் ஈழக்குழந்தையின் இதயம் வெடிக்கும் கடிதம்! - அண்ணன் கை.அறிவழகன்

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது).

நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......

என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானா"-வின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும். அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?

அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்.....

அப்போதே எழுதவேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்... அதனால் தான் எழுதவில்லை........ ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது. ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே? கட்டுரையைத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/ஓர்-ஈழக்குழந்தையின்-இதயம்-வெடிக்கும்-கடிதம்-அண்ணன்-கை.அறிவழகன்

Monday, May 5, 2008

"ஜெயகாந்தன்... அவன் அப்படித்தான்" - பாரதிராஜா

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 75-வது பிறந்த நாள் விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஆற்றிய உரையின் ஒலி வடிவம் கேட்க..... இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/-ஜெயகாந்தன்-...அவன்-அப்படித்தான்-பாரதிராஜாஒலிவடிவில்