Tuesday, November 2, 2010
அதிகாலையின் இன்றைய சூடான செய்திகள்
Sunday, January 11, 2009
காங்கிரசின் பச்சைத்துரோகமும் தி.மு.கவின் ஒட்டுத் துரோகமும்!
காங்கிரசு கட்சியானது தமிழினத்திற்குத் தொடர் துரோகங்களைச் செய்து வருகிறது என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் காங்கிரசினும் தமிழினத்திற்கின்னல் விளைத்தார் எவரேனும் காட்டலரிது.1956-ல் தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றச்சொல்லி அறவழியில் உண்ணா நோன்பிருந்தார் சங்கரலிங்கனார். 76 நாள்கள் நோன்பிருந்தும் காங்கிரசின் வஞ்ச மனம் கனியவில்லை. இறுதியில் காலமானார் சங்கரலிங்கனார். இத்தனைக்கும் சங்கரலிங்கனாரும் ஒரு காங்கிரசுக்காரர்தான். காந்தியாருடன் தண்டியாத்திரை சென்றவர் அவர்.தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர் என்பதற்கு இது சான்று. அந்த சூக்குமம் புரிந்ததால்தான் எந்தத் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரரும் தமிழ் தமிழர் என்று பேசுவதில்லை என்பதை ஓர்க. வெள்ளையர் போனபின்னர் தமிழ்நாட்டிற்காக, தமிழருக்காக உயிர் ஈந்த இவரோடு காங்கிரசின் கணக்கு தொடங்கி குறி வைத்து தமிழினத்தை அது அழித்து வருகிறது.
"தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர்"
1965-ல் இந்தி மொழியை தமிழர்களிடம் வலிந்து திணித்த காங்கிரசு, அதற்கெதிராக கிளர்ந்த தமிழ் மக்களை, காவற்துறையாலும், அரணம் கொண்டும் சுட்டுப் பொசுக்கியது. அந்தக் கொடுமையான 1965 ஆம் ஆண்டின் பிப்ரவரி 8-க்கும் 12-க்கும் இடையேயான 5 நாள்களில் மட்டும் சுடப்பட்டுக் கொல்லப் பட்டவர்கள் 63 பேர். பிப்ரவரி 12 ஆம் நாள் மட்டும் கொல்லப் பட்டவர்கள் 31 பேர். பலரின் சோதனைகளும் வேதனைகளும் வெளியே வரவில்லை. திராவிடக் கட்சிகளாய் இருந்தவை சொன்ன கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 145. அண்ணா என்ற சிறந்த தலைவரும், அவருக்குப் பெரியவராகப் பெரியாரும் இருந்து, இராசாசி, டி.டி.கே போன்றோரெல்லாம் இந்தி திணிப்பை எதிர்த்தபோதும், காங்கிரசின் தமிழ்ப் பகைமைக்கு, இரத்த வெறிக்குப் பலியானவர்கள் நூற்றுக்கும் மேல். ஒவ்வொரு தமிழரைக் கொன்ற போதும், "இந்தி தெரியாவிட்டால் நீ இந்தியனே இல்லை" என்று சொல்லிக் கொன்று போட்டன காங்கிரசின் வடக்கு மூளைகள்! அந்தப் பகையோடு 1967-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசு 1987-ல் தமிழீழத்தில் திலீபன் உண்ணா நோன்பிற்குக் காரணமாய் இருந்து அவர் உயிரையும் காவு வாங்கியது. காங்கிரசை காந்தியார் கலைக்க வேண்டும் என்று சொன்னது அதன் இரத்த வெறியை அறிந்ததனால் இருக்கக் கூடும். தமிழகத்தில் சங்கரலிங்கனாரையும், தமிழீழத்தில் திலீபனையும் பலிவாங்கியது காங்கிரசு. காந்தியம் பேசும் காங்கிரசிடம் அறப்போராட்டங்களும் செல்லாது என்பதற்கு தமிழினத்தின் மேல் அது தொடுத்த இந்தத் தாக்குதல்கள் காட்டா நிற்கின்றன. தொடரும் அதன் தமிழின இரத்த வேட்கையே, 1987-ல் ஒன்னே கால் இலக்க அரணத்தை அனுப்பி, தமிழீழத்தில் 8000 பேரைக் கொன்றதும், கண்ணில் பட்ட மகளிரை சீரழித்ததும். மற்று, 2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கருணாநிதியுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு, மெல்ல மெல்ல தமிழீழத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளைக்கெடுத்து, தமது இத்தாலி வழி தொடர்புகளாலும், இந்தியாவின் பல்வேறு துறைசார் தொடர்புகளாலும் தமிழீழ மக்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி, சிங்களன் துணையோடு இன்றைக்குப் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று வருகிறது.
தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9668&lang=ta&Itemid=62
Friday, October 17, 2008
“தாம்பத்யம்” - நவநீ
“சிவம் நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே? எனக்கு இப்படி அடிக்கடி ஒடம்பு சரியில்லாம வர்றத நெனச்சா மனசுக்கு ரொம்பப் பயமா இருக்கு. யாருக்கும் தெரியாம நம்ம காம்பவுன்ட்-ல இருக்கற முப்பாத்தம்மன் கோயில்ல வச்சு எனக்கு ஒரு மாங்கல்யம் கட்டிடுறீங்களா? நான் நிம்மதியா மாங்கல்யத்தோட, பொட்டும், பூவுமா நித்ய சுமங்கலியாப் போய்ச் சேருவேன்… சிவம்! செய்வீங்களா?” - என்று கலங்கிய கண்களை தன் முந்தானையால் துடைத்துக்கொண்டே சொன்னாள் சிவகாமி.
பதறிப்போன பரமசிவன் “என்ன சிவகாமி நீ! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற! ஒங்கண்ணுக்கு முன்னாடிதானே டாக்டர் சொல்லிட்டுப்போனாங்க, நீ நல்லாருப்பெ சிவகாமி! ஒனக்கு ஒன்னும் செய்யாது சிவகாமி! மாங்கல்யந்தானே! சரி கவலய விடு, நீ சொன்னமாதிரியே நான் வர்ற வெள்ளிக்கிழமை ஒங்கழுத்துல தாலி கட்டுறேன் சரியா? நீ எனக்குன்னே பொறந்தவ சிவகாமி. விசாலம் செத்த அன்னைக்கே, அவகூட நானும் போய்ச்சேந்துருக்கணும், பகவான் என்னெ ரொம்பச் சோதிச்சுட்டார். ஆனா விசாலம் என்னெத் தனியா விடக்கூடாதுன்னு, ஒன்னோட ரூபத்துல வந்து எங்கூடவே வாழ்ந்துகிட்டு இருக்கா, நாம ரெண்டு பேரும் இன்னும் ரொம்ப நாள் உயிரோட இருப்போம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே
“ஐயா! ஒங்களுக்குப் போன் வந்திருக்காம், ஆபீஸ்ல கூப்படுறாங்க! ஆயாம்மாள் வந்து சொல்லிச் சென்றாள்.
“ஹலோ! என்னப்பா! சௌக்யமா இருக்கேளா? பணமெல்லாம் டைமுக்கு வந்து சேந்துருக்குமே! நான் ஒரு ப்ராஜக்ட் விசயமா சைனா வந்தேன். கொஞ்சம் டைம் கெடச்சது, அதான் ஏர்போர்ட்ல இருந்து பேசுறேன். நான் யு.எஸ். போனதும் கால் பண்றேன், ஒடம்பப் பாத்துக்கங்க! முடிஞ்சா இந்த இயர் என்ட்-ல பசங்களுக்கு சம்மர் வெகேசனுக்கு சென்னை வர்றதா இருக்கோம். கன்ஃபாம் ஆனா சொல்றேம்பா, வேற ஒண்ணும் சேதி இல்லயே!” ஒரே மூச்சில் மகன் ஸ்ரீகாந்த் எதிர்முனையில்.
“….ம்ம்…ம்.. இல்லப்பா” பரமசிவம் சொல்லி முடித்தவுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
பரமசிவம் ஒரு ரிடையடு தாசில்தார். நேர்மையான, கௌரமான மனிதர். தனது மனைவி விசாலம். குழந்தையே இல்லாமல் தவமாய் தவமிருந்து திருமணமாகிப் பதினான்கு வருடங்களுக்குப்பின் பெற்றெடுத்த ஒரே பிள்ளை ஸ்ரீகாந்த். மகன், தனக்கு இது வேண்டுமென்று நினைக்கும்போதே அவன் கண் முன் கொண்டுவந்து அதை நிறுத்தியிருப்பார் பரமசிவம். அளவுக்கு மீறிய சுதந்திரம் பிள்ளைக்குக் கொடுத்தவர். படித்தவராயிற்றே! கேம்பஸ் இன்டர்வியு மூலமாகவே வேலை கிடைத்துத் தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு முறை இந்தியா வந்திருந்தபோது தனது பெற்றோரிடம், தான் ஒரு இந்திய வம்சாவழிப் பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும், அனுமதி கேட்பதற்குப் பதிலாக தகவல் சொன்னான். சற்று அதிர்ச்சியுற்றாலும், அதனைப் புரிந்துகொண்ட பரமசிவமும் விசாலமும் மகனின் மனம் புண்படக்கூடாதென்பதற்காக ‘சரி’ என்று ஒப்புக்கொண்டனர்.
திரும்ப அமெரிக்கா சென்ற ஸ்ரீகாந்த், மூன்று மாதங்கள் கழித்து, பெற்றோரை அமெரிக்கா அழைத்துச்செல்வதற்கான, விசாவில் தாமதம் ஏற்படுகிறதென்பதால், அதுவரை பொறுக்கமுடியாத வம்சாவழிப்பெண், எங்கே வேறொரு கை மாறிவிடுமோ என்று திருமணத்தை முடித்துவிட்டு வழக்கம்போலப் பெற்றோருக்குத் தகவல் சொன்னான். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் கணவர் இவற்றையெல்லாம் நினைத்து மனதுக்குள்ளேயே வேதனைப்படுவதையும் பார்க்கப் பொறுக்காமல், பல நாள், இதுபற்றியே பேசிப்பேசிக் கவலையடைந்த விசாலம் அவளுக்கே தெரியாமல் ஒருநாள் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்துவிட்டாள். விசாலமும் தன் பிள்ளையும்தான் இந்த உலகம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்த பரமசிவம் தனியாளாய் தவித்து நின்றார்.
அதுவரை கலங்காத பரமசிவம் தன்னையும் மீறிக் கதறிக் கதறிக் கண்ணீர்விட்டுத் தானும் உயிரை விட்டுவிடுவோம் என்று நினைக்கையில்,
“அப்பா ஒங்களவிட்டா எனக்கு யாருப்பா இருக்கா? என்னெ மன்னிச்சுருங்கப்பா, அம்மா என்னெ நெனச்சு ரொம்பக் கவலப்பட்டே போய்ச்சேந்துட்டாங்கப்பா, நீங்களாவது இனிமே எங்ககூட இருங்கப்பா” என்று தன் மகன் தன்னைக்கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது, தான் கூடிய விரைவில் தன்னை அமெரிக்கா அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசியதும் பரமசிவன் மனம் மாறிவிட்டார்.
ஆனால் நடந்த கதை வேறு, விசா எல்லாம் தயார் செய்துகொண்டு அழைத்துப்போகும்வரை, தன்னைத் தனியாக விட்டால் அம்மாவையே நினைத்து ரொம்பக் கவலைப்பட்டு எதுவும் செய்து கொள்வார் என்ற அக்கறையில், இப்போது தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்றவன்தான். வருடங்கள் 7 ஆகிவிட்டது. வாரம் தவறாமல் மகனிடமிருந்து போன் வரும். ஆனால் விசா இன்னும் வந்தபாடில்லை. பரமசிவனும் இதுவரை அதுபற்றிக் கேட்டதும் இல்லை. தனக்கு மாதாமாதம் வரும் பென்சன் பணத்தையும், மகன் அனுப்பும் பணத்தையும் கூட அந்த இல்லத்துக்கே அவர் கொடுத்துவிடுவதால், அனைவருக்குமே பரமசிவத்தின்மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம். பரமசிவத்தின் ஆலோசனையின் பேரில் இப்போது முதியவர்கள் மட்டுமல்லாது ஆதரவற்ற சில குழந்தைகளையும் அந்த இல்லம் தத்தெடுத்துக்கொண்டது.
பரமசிவன் முதியோர் இல்லத்துக்கு வருவதற்கு முன் இருந்தே சிவகாமி அங்கு இருக்கிறாள். கிட்டத்தட்ட இவர்கள் இருவரும்தான் அங்கு நெடுநாட்களாக இருப்பவர்கள். இல்ல நிர்வாகத்தினர் தவிர அனைவருமே இவர்களைக் கணவன் மனைவி என்றே நினைத்துக்கொண்டிருந்தனர். சிவகாமி எங்கு பிறந்தாள். பெற்றோர் யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏன்? அவளுக்கே தெரியாது. இந்த இல்லத்தை நடத்தும் புலம் பெயர்ந்த இந்தியர்கள், கல்கத்தாவில் அவர்களின் கிளையில் இருந்து சிவகாமியை அவளது முப்பதாவது வயதில் சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். இங்கு இந்த இல்லத்தில் முக்கியமான பணிகளையெல்லாம் கவனித்துவருகிறாள். தான், கல்கத்தாவில் சிவராத்திரியன்று கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் ஒப்படைக்கபட்டதாகவும், அங்கு அடிக்கடி வந்து போகும் அன்னைத் தெரசாதான் தனக்குச் சிவகாமி என்று பெயரிட்டதாகவும், தனக்கென்று யாருமில்லையென்றும், தான், ஒரு ஆதரவற்ற பெண் என்பதையும் சிவகாமி பரமசிவனிடம் சில வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் அன்பாகப் பழகினர். ஒருவருக்கு வேண்டியதை இன்னொருவர் செய்துகொண்டு, மிக அமைதியான சூழலில் வாழ்ந்தனர். பரமசிவத்துக்குக் கிடைக்கவேண்டிய மன அமைதி, நிம்மதி இந்த இல்லத்தில் கிடைத்ததாகவே உணர்ந்தார். அதனால்தான் அமெரிக்கா செல்வது பற்றித் தன் மகனிடம் அவர் இதுவரை பேசியதே இல்லை.
பரமசிவனைச் சிவகாமி தன்னுடைய 50-வது வயதில் சந்தித்தாலும், தனக்குப் பரமசிவன் மேல் அளவுகடந்த மரியாதை, இதுவரை உணராத ஒரு பாச உணர்வு. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஏதோ நெருங்கிய சொந்தம் கிடைத்தது போன்ற ஒரு தெளிவு. தனக்கென்று கடவுள் இவரை அனுப்பியிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ மனதுக்குள் தோன்றிற்று. காதல், காமம், உறவு, இல்லறம், பிரிவு இவையெல்லாம் சிவகாமிக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்தது கருணை ஒன்றே! தியானம், பக்தி, படிப்பு இவைகள்தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்த சிவகாமிக்கு தன்மீது பரமசிவம் காட்டும் அக்கறை, பொறுப்பு, பாசம், பரிவு, பகிர்தல் இவையெல்லாம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அந்தப்பாச உணர்வுகளை மனம் தேட ஆரம்பித்தது. இருவருக்குமே இந்த வயதில் எது தேவையோ அந்தத் தேவைகள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கிடைத்ததை மனப்பூர்வமாக, ஆத்மார்த்தமாக உணர்ந்தனர். தத்தம் உணர்வுகளைச் சரியான அலைவரிசையில் பகிர்ந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் இருந்துவிட்டால் அந்த உறவில் ஏற்படும் பலமே வீரியம் மிக்கதுதான். அது அங்கு இரட்டிப்பானது. எப்போதும் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒன்று கோவிலில் இருப்பார்கள் அல்லது அங்குள்ள சிறிய பூங்காவில் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
சிவகாமி முதன்முறையாக அழுதது அன்னைத் தெரெசாவின் மறைவின்போதுதான். இரண்டாவது முறையாக இன்றுதான் அழுதிருக்கிறாள். தனக்கு உடல்நிலை மோசமாகி அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவதால், எங்கே? தான் பரமசிவத்தை விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்று எண்ணித் தனக்கு மாங்கல்யம் கட்டச்சொல்லும்போதுதான் அழுதிருக்கிறாள். கடவுளிடம் இந்தக் கன்னியுள்ளம் வேண்டுவதெல்லாம்
“நான் மறுபடியும் சிவகாமியாகவே பிறக்கவேண்டும். பரமசிவனின் மனைவி ஆவதற்காகவாவது பிறக்கவேண்டும். ஆனால் ஒரு ஆதரவற்ற அனாதையாக மறுபடிப் பிறக்கவே கூடாது” என்பதுதான்.
இன்று சிவகாமி மிகவும் தெளிவான முகத்தோடு காணப்பட்டாள். வெள்ளிக்கிழமையும் வந்தது. அங்குள்ள பிள்ளைகளும், முதியோர்களும் புத்தாடையிலும் இனிப்புகளிலுமாக குதூகளித்து அனைவரும் பேசிக்கொண்டனர். “சிவகாமிப்பாட்டிக்கும் பரமசிவம் தாத்தாவுக்கும் பொன்விழாவாம். அந்தத் தாத்தாவுக்கு 75 வயசாச்சாம். சீக்கிரமே 100-வது வயசுக்கல்யாணமும் கொண்டாடணும், அப்பத்தானே எங்களுக்கெல்லாம் நெறைய ஸ்வீட், ட்ரெஸ் எல்லாம் கெடைக்கும்... ஹையா.. ஜாலி.... பெஸ்ட் ஆப் லக் தாத்தா!’’ தனக்கு 75 வயது ஆகாவிட்டாலும் அனைவரிடமும் அவ்வாறு சொல்லி, எந்த உறவுகளுமே இல்லையென்றாலும், அந்த இல்லம்தான் உலகம் என்று ஆயிரமாயிரம் கனவுகளோடு துள்ளிக்குதிக்கும் கள்ளம் கபடமற்ற பிஞ்சு உள்ளங்களின் முன்னிலையிலும், வாழ் நாளெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளுக்காக மெழுகாக உருகித் தன்னை அர்ப்பணித்துவிட்டுக் கடைசிக்காலத்தில், எப்பொழுது ஆதரவும், பரிவும், பாசமும் அவர்களுக்குத் தேவையோ அப்பொழுது, பெற்ற பிள்ளைகளாலேயே சுமையென நினைத்துத் தூக்கி வீசப்பட்ட அந்த ஆதரவற்ற முதியோர்களும் வாழ்த்துவதைவிடவா வேறொருவர் வாழ்த்திவிட முடியும்? அந்த அற்புத உலகத்தைத் தமதாக்கிக் கொண்டு அவர்களின் ஆசீர்வாதத்தோடு, வாழ்க்கை, இல்லறம் என்றால் என்னவென்றே தெரியாமல், பாசம், பரிவு, கருணை இவைகளே வாழ்க்கை என்று எண்ணி வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்து மறைந்த அந்த அன்னைத் தெரசாவைப் போன்றே வெள்ளை உள்ளம் படைத்த அந்தக் கன்னி சிவகாமியின் கழுத்தில் பரமசிவன் தாலியைக் கட்டித் தன் சொந்தமாக்கிக்கொண்டு அந்த இல்லத்துக்குள்ளேயே இருவரும் தன் சொந்தங்களான அந்தப் பிஞ்சுக்குழந்தைகளோடு குழந்தைகளாக அடைக்கலம் புகுந்தனர். http://www.thinnai.com/?module=displaystory&story_id=10810164&format=html