பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு ரகசியமாக வந்து சென்றாரா? இல்லையா? என்பதில் மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. அப்படி அவர் வந்திருந்தால் அது எப்படி மற்றவர்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பு இருக்கும்! அவர் தமிழகம் வந்தாரா? இல்லையா? ஏன் வந்தார்? எப்படி ரகசியாமாய் வர முடிந்தது? எனப் பல்வேறு ஊகங்களும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கொடிக் கட்டிப் பறக்கிறது. வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் அமைத்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தனது மகனுடன் புதன் கிழமை வந்தது உண்மைதான் என்று மத்திய புலனாய்வுத் துறை (ஐ.பி) அதி காரிகள் கூறினர். ‘புதன்கிழமை காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பிறகு கார் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு வேலூர் ஸ்ரீபுரம் பொற் கோயிலுக்கு கார் மூலம் வந்தார். அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் பொற்கோயிலில் இருந்தார். ஸ்ரீலட்சுமி நாராயணியை தரிசனம் செய்தார். பின்னர் அவர் கார் மூலம் சென்னை சென்று மாலையில் தில்லி புறப்பட்டார்' என்று மத்திய உளவுத் துறையினர் குறிப்பிட்டனர்.
ஆனால், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளும், கோயில் நிர்வாகமும் தொடர்ந்து மறுத்து வருகின்றன. புதன்கிழமை பிற்பகல் பிரியங்கா தனது மகன் மற்றும் இன்னொரு உறவினருடன் வருவதாக வந்த தகவலையடுத்து வேலூர் பத்திரிகையாளர்கள் ஸ்ரீபுரத்தில் குவிந்தனர். ஆனால் பாகாயம் காவல்நிலைய காவலர்கள் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். பத்திரிகையாளர்கள் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பிரியங்கா வருகிறாராமே என்று கேட்கத் தொடங்கிய பின்னரே ஒரு டிஎஸ்பி அந்த இடத்திற்கு வந்தார்.
ஆனால், முக்கிய விருந்தினர் மாளிகைகள் அனைத்தும் மிக முக்கிய விருந்தினர் தங்குவதற்கென மத்திய புலனாய்வுத் துறையினர் தங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டனர். மத்திய உளவுத் துறை அதிகாரிகள் அனைவரின் கைபேசி, தொலைபேசி அனைத்தும் செயலிழக்கப்பட்டிருந்தன.
வியாழக்கிழமை காலையில்தான், பிரியங்கா வந்தது உண்மை என்று உயர் அதிகாரிகள் கூறினர். ஆனாலும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் நாங்கள் யாருமே அவரைப் பார்க்கவில்லை. நீங்கள்தான் (பத்திரிகைகள்தான்) சொல்கிறீர்கள் என்று கூறினர்.
அவர்கள் சொல்லும் காரணங்கள்:
1. தமிழகத்தில் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு, முக்கிய விருந்தினரை குறிப்பாக ராஜீவ் குடும்பத்தினரைபொது வழியில் அழைத்துச் செல்லும் முடிவை தமிழக காவல்துறை மேற் கொள்ளாது. சிறப்பு வழியில் அழைத்துச் செல்லும்போது, தரிசனம் செய்யும் வரிசையை நிறுத்தி வைப்பது வழக்கம்.
2. புதன்கிழமை அவ்வாறு தரிசனம் நிறுத்தப்தப்படவில்லை. சில மாதங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி காரிலேயே வந்து சுற்றிப் பார்த்ததை நினைவு கொள்ளுங்கள். பிரியங்கா முகம் இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தக் கோயிலுக்கு தினமும் குறைந்தது 50 ஆயிரம் பேர் வருகிறார்கள். குறிப்பிட்ட அந்த நேரத்தில் 10 ஆயிரம் பேர் கோயில் வளாகத்தில் இருந்திருப்பார்கள். இவர்களில் ஒருவர்கூட காணமுடியாதபடி, உயரமான பெண்மணியாகிய பிரியங்கா யார் கண்ணிலும் படாமல் வந்து சென்றிருப்பாரா? அவர் வடஇந்திய பெண் போல முக்காடிட்டு வந்திருந்தாலும் அவரது உயரம் மற்றவர் கவனத்தைக் கவருமே.
3. ஸ்ரீபுரத்தில் யார் கண்ணிலும் படா விட்டாலும், ஸ்ரீபெரும்புதூரில் தந்தை யின் சமாதியில் அஞ்சலி செலுத்தியதைக்கூட யாரும் பார்த்திருக்க மாட்டார்களா? பொற்கோயிலில் செல்போன் தடை செய்யப்படுகிறது. ராஜீவ் நினைவு மண்டபத்தில் செல்போன் தடைஇல்லை. சிட்டிசன் ஜர்னலிசம் செய்வோர் செல்போனில் ஒரு படம் எடுத்திருக்க வாய்ப்பில்லையா?
4. அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த வர் என்பதால் ரகசியம் காக்கப்பட்டது என்பது பொருந்தாது. அவர் ராஜீவ் காந்தியின் மகள். அரசியல் வாரிசு.மதம் கடந்தவர். இந்த வருகையை வெளிப்படுத்துவதால் இந்து மதத்தின ரின் வாக்குகள் கிடைக்குமே.
5. உள்துறை செயலகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அவர் தமிழகத்திற்கு வர முடியாது. அப்படி வந்திருந்தாலும், அவர் புறப்பட்டுச் செல்லும்போதாகிலும், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் முதல்வரின் மகள் கனிமொழியாகிலும் விமான ஓடுதளத்திற்கே சென்று ஒரு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்திருக்க மாட்டாரா? இத்தனை காரணங்களைச் சொல் லும் அந்த காவல்துறை அதிகாரிகள் சொல்லும் விளக்கம்- இதை ரகசியம் கசியும் திசை அறியும் ஒரு ஒத்திகை நிகழ்வு என்றே கருத வேண்டியிருக்கி றது என்பதுதான்.
கோயில் அறங்காவலர்கள் குழு பிரியங்காவுடன் போட்டோ எடுத்துக் கொண்டதாகவும் பேச்சு நிலவுகிறது.
யார் சொல்வது நிஜம்? ஒருவேளை, நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஒரு பெண் பிச்சை போட்டது அவரது வாழ்க்கைப் புத்தகத்தில் தெரியவந்ததைப் போல, பிரியங்காவின் சுயசரிதையில் தெரிய வருமோ, பொற்கோயில் வருகையும்!
(மேற்கண்ட பரபரப்புச் செய்தியை ‘தினமணி’ நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.)
No comments:
Post a Comment