Sunday, December 18, 2011

"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" : கலெக்டர் சகாயம்

"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" : கலெக்டர் சகாயம். "ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" என தான் பதிலெழுதிய சுவாரசியமான தகவல்களை ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் தெரிவித்தார். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில்  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது : "அனைத்து துறைகளிலும் தாய் மொழியாம் தமிழை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.  இங்கு வழங்கப்பட்ட கருத்துக்களை நீங்கள் அனைவரும் உங்கள் அலுவலகத்தில் களத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.  தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கருதுவதில் நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மைதான் இடர்பாடாக இருக்கிறது.  தமிழ் மொழி பேசுவதால் நமக்குள் நாமே தாழ்வானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் அகற்ற வேண்டும்.  எந்தவொரு பொருளும் தொலைவில் இருக்கின்ற வரைதான் அதன் மேல் நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும்.  எப்பொழுது அந்தப் பொருள் நமது கைக்குள் வருகிறதோ அப்பொழுது அதன் மேல் உள்ள ஈர்ப்பு போய்விடும்.  அதற்காகதான் நான் எப்பொழுதும் சொல்வதுண்டு.  ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.  மாறாக ஆங்கில அடிமைத்தனத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று!

ஒரு முறை ஒரு கிராமத்தில் சமபந்தி நிகழ்வில் எனக்கு ஒரு அலுவலர் மனு கொடுக்கும் பொழுது மனுவின் இறுதியில் கருப்பையா என்ற தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டிருந்தார். நான் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறேன். யாரோ ஒரு ஆங்கிலேயர் எனக்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார். அவருடைய மனுவைப் பரிசீலிக்க நான் தயாராக இல்லை எனக் கூறிய பொழுது அந்தக் கருப்பையா என்னிடத்தில் வந்து 'அய்யா நான் தமிழன்தான்' என்று சொன்னார்.

நீங்கள் இருப்பது தமிழ்நாட்டில்; பழகுவது தமிழ் மக்களோடு; பிறகு ஏன் உங்கள் கையெழுத்தை மட்டும் ஆங்கிலத்தில் போடுகிறீர்கள். அதை தமிழில் போட்டு கொண்டு வாருங்கள். ஒரு முறை போட்டால் உங்களுக்குப் பழகாது. அதனால் குறைந்தது 50 முறை ஒரு தாளில் போட்டு கொண்டு வாருங்கள் என்று கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார். இந்த நிகழ்வு அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தது. இதை படித்த யாரோ ஒருவர் எனக்கு ஒரு தந்தியை அனுப்பியிருந்தார்.

அதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே, கையெழுத்தைத் தமிழில்தான் போட வேண்டும் என்று சொல்லுவது எங்கள் உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பது போன்ற செயலாகும். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வளவு மெனக்கட்டு எனக்கு தந்தி அனுப்பியிருந்த அவருக்கு 'ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரத்தைப் பற்றி பேச அருகதை இல்லை' என்று பதில் அனுப்பியிருந்தேன். எதற்கு இதை சொல்லுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஆங்கில மோகம் நம் தமிழ் மக்களிடையே பரவி கிடைக்கிறது.

பல்வேறு மொழிகளை அறிந்திருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினான். ஆனால் ஒரு மொழியைக்கூட உருப்படியாக தெரிந்து கொள்ளாத நாம், நம் தாய் மொழியை விட்டு ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்டவர்களாக ஆங்கில அடிமைகளாக உள்ளோம்.

எனவே, தமிழர்களாகிய நாம் நம்முடைய பழம் பெருமைகளைப் பேசி பேசியே காலங்களைக் கடத்துவதில் பயனில்லை. என்றைக்கு ஆங்கில அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறோமோ அன்று தான் தமிழன் என்ற பெருமை நிலைக்கும். இதற்கு இந்த ஆட்சி மொழி கருத்தரங்கம் நல்ல பாதை வகுக்கும். இந்த நிகழ்ச்சி வெறும் ஆட்சி மொழி கருத்தரங்காக மட்டுமல்லாமல் உங்களுக்குச் சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் களமாக அமைந்திருக்கும். உங்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் எழுதப்படும் கோப்புகளும், தங்களின் கையெழுத்துகளும் இனி தமிழிலேயே அமையும் என்று உறுதியேற்க வேண்டும். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சதவீதம் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி நடைமுறைப்படுத்தப்படும்" என்று கலெக்டர் சகாயம் பேசினார்.

இறுதியில் ஆட்சி மொழியை அலுவலகங்களில் சிறந்த முறையில் பயன்படுத்திய அலுவலர்களுக்குப் பரிசு கேடயமும், பாராட்டுச் சான்றிதழ்களையும், ஆட்சி மொழி கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களுக்குச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர். பெ.சந்திரா, திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி.லெ.கல்யாணசுந்தர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கோ.விசயராகவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர்.கா.பசும்பொன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மாவட்ட ஆட்சியாளரின்ன் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அலிஅக்பர் நன்றியுரையாற்றினார்.

Friday, October 28, 2011

மீண்டும் நெருக்கடியில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" : படம் வெளியிடத் தடை

மீண்டும் நெருக்கடியில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" : படம் வெளியிடத் தடை! இயக்குனர் வடிவுடையான் இயக்கி, கரண், அஞ்சலி நடிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழக கேரள எல்லையைச் சுற்றி நடைபெற்ற உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளுக்கும், படப்பிடிப்பில் அடிதடி, தகராறு போன்றவற்றிற்கும் குறைவில்லை என்றே கூறலாம். கிட்டத்தட்ட தீபாவளிக்குப் பிறகு ஓரிரு வாரங்களில் படம் வெளியிடப்படும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் விழுந்திருக்கிறது இன்னொரு அதிர்ச்சி செய்தி. இப்படத்தினை திரையிட விடாமல் தடை வாங்குவோம் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் மட்டுமின்றி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவிக்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக வரும் திங்களன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர் ஒரு தரப்பினர். மேலும், படம் வெளியிடுவதற்கு முன்னர் இந்தப்படத்தினை எங்களிடம் திரையிட்டுக் காண்பிக்கவேண்டும், அதன் பின்னரே படம் வெளியிடப்படவேண்டும் என்று 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' பட இயக்குனர் வி.சி.வடிவுடையான் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிற்கு "லைன் பால் அசோஸியேட்ஸ்" (Line Ball Associates) என்ற தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டிஸில் கூறப்பட்டிருப்பதாவது : 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் முழுக்க முழுக்க கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறினாலும்,

அந்தப்படத்தில் வரும் சம்பவங்களும், காட்சிகளும் அந்தப் பகுதியைக் கொச்சைப் படுத்தும் விதமாகவும், வரலாற்றுச் சம்பவங்களுக்கு முன்னுக்குப் பின் முரணாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்தப் படம் கண்டிப்பாக எங்கள் பகுதி மக்களின் மனநிலையையும், கெளரவத்தையும் பெருமளவில் பாதித்து மன உளைச்சலுக்கு உட்படுத்தும். மேலும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக மாறக்கூடும் என்றும் அஞ்சுகிறோம். எனவே, இந்தப்படத்தினை வெளியிடாமல் உடனடியாக நிறுத்தி, படத்தினை திரையிடுவதற்கு முன் எங்கள் மனுதாரர்களிடம் திரையிட்டுக் காண்பித்து, மேற்கண்டவாறு படத்தில் எதுவும் தவறுதலாகச் சித்தரிக்கப்படவில்லை என்று எமது மனுதாரர்கள் உறுதியளிக்கும் பட்சத்தில் படத்தினை வெளியிடலாம். மீறி படத்தினை வெளியிட்டால் நாங்கள் படத்தினை வெளியிடத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்'. இது சம்பந்தமாக நோட்டிஸ் கிடைத்த மூன்று தினங்களுக்குள்ளாக எங்களுக்கு பதிலளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் திங்களன்று நடைபெறப்போகும் ஆர்ப்பாட்டத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

என்ன வடிவு சார்..... பாடர்னாலே.... பிரச்சினைதான்.

படத்திற்கு தடையா? அல்லது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு விடையா? நீங்கதான் சொல்லணும்.